Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

புரோகிதர் ஆட்சி
ந.சி. கந்தையா




1. புரோகிதர் ஆட்சி
2. தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
3. அகம் நுதலுதல்
4. நூலறிமுகவுரை
5. கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
6. பதிப்புரை
7. புரோகிதர் ஆட்சி

 


நூற்குறிப்பு
  நூற்பெயர் : புரோகிதர் ஆட்சி
  ஆசிரியர் : ந.சி. கந்தையா
  பதிப்பாளர் : இ. இனியன்
  முதல் பதிப்பு : 2003
  தாள் : 16.0 கி. மேப்லித்தோ
  அளவு : 1/8 தெம்மி
  எழுத்து : 11 புள்ளி
  பக்கம் : 20 + 164 = 184
  படிகள் : 2000
  விலை : உரு. 80
  நூலாக்கம் : பாவாணர் கணினி
  2, சிங்காரவேலர் தெரு,
  தியாகராயர் நகர், சென்னை - 17.
  அட்டை வடிவமைப்பு : பிரேம்
  அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட்
  20 அஜீஸ் முல்க் 5வது தெரு
  ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006
  கட்டமைப்பு : இயல்பு
  வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம்
  328/10 திவான்சாகிப் தோட்டம்,
  டி.டி.கே. சாலை,

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)


தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே.

‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’

என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர்.

ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:-

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார்.

ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார்.

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின.

ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம்.

அகராதிப் பணி
தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை.

ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார்.

இலக்கியப் பணி
புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள்.

பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர்.

தமிழ்மொழி - தமிழினம்
தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை.

திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும்
தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:-

திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார்.

பிற
மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார்.

“ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.”

வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்!

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன்.

அன்பன்

கோ. தேவராசன்

அகம் நுதலுதல்


உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம்.

உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது.

தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது.

தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம்.

எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள்.

இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது.

எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை.

வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன.

உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும்.

இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது.

சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி.

அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம்.

உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது.

நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம்.

அன்பன்

புலவர் த. ஆறுமுகன்

நூலறிமுகவுரை


திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார்.

இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன.

திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன.

இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன.

ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு:

சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன்.
2/7, றாம்ஸ்கேட், அன்புடன்

58, 37ஆவது ஒழுங்கை,

கார்த்திகேசு சிவத்தம்பி

வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர்

கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.

கருவிநூல் தந்த ந.சி. கந்தையா


தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று.

தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.

உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை.

தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.

உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள்.

மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம்.

நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம்.

தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.

ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.

பேரா. கு. அரசேந்திரன்

பதிப்புரை


வளம் சேர்க்கும் பணி
“குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம்.

இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன.

ந.சி. கந்தையா
இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது.

தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர்.

தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது.

தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர்.

நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள்
1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன.

வாழும் மொழி தமிழ்
தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம்.

ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா?

தமிழர்களின் கடன்
இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன்.

மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள்.
எழுச்சிக்கு வித்திட…
உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது.

இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பதிப்பகத்தார்

புரோகிதர் ஆட்சி


முன்னுரை
பொதுமக்களை அழுத்தி அவர்கள் தோள்மீது சவாரி செய்து கொண் டிருக்கும் ஒரு கூட்டத்தார் மிகப் பழங்காலம் முதல் உலக முழுவதும் பரவி வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் புரோகிதர் எனப்படுவர்.

இவர்கள் மரங்களில் முளைக்கும் புல்லுருவியும், பயிர்களிடையே பெருகி வளரும் களையும், ஆடுமாடுகளின் இரத்தத்தை உறிஞ்சி வாழும் உண்ணியும் போன்றவர்கள் என்பது, நெடு நாட்களாக மக்கள் அறிந்துள்ள உண்மையாகும்.

மேற்குத் தேசங்களில் கத்தோலிக்க கிருத்துவமதம் தலை எடுத்தபோது, இப்புரோகிதக் குழுவுக்கு மாறாக மார்டின் லூதர் என்னும் செர்மானியர் புரட்சிக் கருத்துக்ளைப் பொதுமக்களிடம் விதைத்தார்; விதை விரைவிலே முளைத்துச் செழித்து வளர்ந்ததுகண்டு வாட்டமுற்ற அந்நாட்டுப் புரோகிதர், அடக்கு முறையால் அழிக்கப் பார்த்தும் பயனிலதாயிற்று. நமது நாட்டிலும் புரோகிதத் தன்மையை எதிர்த்துப் புரட்சி மதங்கள் பல தோன்றின. புத்தம், சைனம், வீர சைவம் ஆகிய கொள்கைகள் புரோகித எதிர்ப்புக் கொள்கைகளாக எழுந்தனவே. அதே காலத்தில் புரோகிதர் ஆட்சியின்முன் வலிகுன்றி மறைந்தன.

பழைய உணர்ச்சியைப் பின்பற்றியே இன்று, தன்மான உணர்ச்சிக் கட்சி தோன்றி இப்புரோகிதத் தொல்லையை ஒழிக்க முயன்று வருகின்றது. அவ்வியக்கத்திற்குத் தலைமை தாங்கி நிற்கின்றவரை இவ்விருபதாம் நூற்றாண்டின் மார்டின் லூதர் என்றே கூறலாம். நம் முன்னோர் முயன்று புரோகிதரின் சூழ்ச்சியால் தோல்வி கண்டனராயினும் இன்றைய லூதர் வெற்றி காணவேண்டும் - காண்பார் என்பதே எமது அவா.

இச்சிறுநூல் உலக முழுமையிலும் காணப்பட்ட - காணப்படுகின்ற புரோகிதப் புரளியை, பூசாரிக் கொடுமையைச் சரித்திரச் சான்றுகொண்டு விளக்குகின்றது.

“The Brahmans had grown to power side by side with kings and chieftains down to the present day. Brahmanism preserves its power through all wreck of ages - possibly as a mere phantom of its shadow” - “A Literary History of India” P. 148. R. W. Frazer.
“See the priests in the temples how they try to fleece the poor worshipper, go to the banks of the Ganges, and you will see the pandits refusing to perform some ceremony till the unhappy villager pays up. Whatever happens in the family a birth, marriage or death the priest steps in and payment is required.
Glimpses of World Hilstory p. 203-Pandit Nehru
ந.சி. கந்தையா

புரோகிதர் ஆட்சி
தோற்றுவாய்
பார்ப்பார் என்னும் சொல் தென்னிந்தியாவில் கோயிற் பூசை புரியும் குலத்தினரைக் குறிக்க வழங்கப்படுகின்றது. பார்ப்பார் என்னும் பெயர் கோயில்களை மேல்பார்த்துத் தெய்வத்துக்குப் பலி செலுத்துகின்ற மக்களைக் குறிக்க வழங்கிய காரணப்பெயர். ஆகவே, முற்காலத்தில் இது ஒரு சாதி யினரைக் குறிக்க வழங்குவதாயிற்று. பார்ப்பார் என்னும் கூட்டத்தினர் ஒரு பொதுத் தொடக்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். கோயில்களை மேற்பார்த்த பல்வேறு வகுப்பினரின் தொகுதியினரே இன்றையப் பார்ப்பனர் என்னும் குலத்தினராவார்.

தமிழ்நாட்டில் காணப்படுவதுபோலவே உலகில் எல்லாப் பாகங்களி லும் பார்ப்பார் இருந்தனர்; இருக்கின்றனர். அவர்கள் குருமார் எனப்படு கின்றனர். பார்ப்பாருக்குப் பூசாரிகள் என்பதும் இன்னொரு பெயர். இது தெய்வத்துக்குப் பலியிடுதல் காரணமாக உண்டான பெயர். பூசாரி என்பது பூசை என்னும் அடியாகப் பிறந்தது. பூசைக்குமூலம் புசி. பூசாரி என்பதற்குத் தெய்வத்தைப் புசிப்பிப்பவன் என்பது பொருள். பூசை என்பதை வடசொல் எனக் கூறுவர் சிலர். வடமொழியிலுள்ள திராவிடச் சொற்கள் எனக் ‘கிட்டல்’ என்பார் காட்டிய பல சொற்களுள் பூசை என்பதும் ஒன்று.

முற்காலத்தில் இத்தாலியினின்றும் வந்த தத்துவ போத சுவாமி (Robert de Nobile), வீரமாமுனிவர் (Constantius Beschi) முதலியோர் தம்மை உரோமாபுரிப் பார்ப்பார் எனக் கூறினர். வீரமாமுனிவரின் சமையற்காரர், பரிசாரகர் முதலினோர் பார்ப்பாராகவே இருந்தனர்.

இந்நூல் இவ்வுலக முழுமையிலும் பார்ப்பார் எவ்வாறு மக்கட் சமூகத் தாரிடையே முதன்மை பெற்று மக்களை நசுக்கினார்கள் என்பதை ஆராய்ந்து கூறுகின்றது.

இரு ஆட்சிகள்
இவ்வுலகில் இரண்டு ஆட்சிகள் உண்டு; ஒன்று அரசன் ஆட்சி; மற்றது பார்ப்பார் ஆட்சி. பார்ப்பார் ஆட்சி அரசன் ஆட்சிக்குமுன் தொடங் கியதெனக் கருதப்படுகின்றது. ஒரு காலத்தில் பூசாரியே அரசனுமாக விருந்தான். கிழக்குத் தேசங்களில் அரச சின்னமாக விளங்கிய குடை, முற்கால மழை பெய்விப்பவனாகிய (Rain-Maker) மந்திர வித்தைக்கார அரசனின் சின்னமேயெனக் கருதப்படுகின்றது. பின்பு இவ்விரு அதிகாரங் களும் பிரிந்து தனித்தனித் தமது ஆளுகையை இவ்வுலகில் தொடங்கின. அரசன் தனது புய வலியினாலும், படை வலியினாலும் ஆண்டான். பார்ப்பார் புயவலியையும், படைவலியையும் வேண்டவில்லை. வெளிப்பாடு (Oracle), கடவுள் எண்ணங்களை மக்களுக்கும், மக்கள் எண்ணங்களைக் கடவுளுக்குங் கூறுவதாகிய தரகு, கடவுளரின் சீற்றத்தைப் பலி செலுத்திப் புரியும் தணிப்பு, தம் சொற்களைக் கடப்பவர் மறுமையில் அடையும் துன்பு போன்ற சில கதை களையும் தந்திரங்களையுமே வலிய ஆயுதங்களாகப் பயன்படுத்தினர். வில், வாள், வேல்களுக்கு அஞ்சுவதிலும் பார்க்கப் பொதுமக்கள் இவ்வாயுதங் களுக்குப் பெரிதும் அஞ்சினர். முடி மன்னரே அவர் கால்களில் விழுந்தனர். இவ்வாறு பார்ப்பார் அரசரையும் குடிகளையும் ஆட்டுவிக்கும் வலிமை பெற்றார்கள். பார்ப்பார் ஆட்சியை ஒழிப்பதற்குக் காலத்துக்குக் காலம் பல வாறு முயலப்பட்டது. ஆனால், அம்முயற்சிகள் பலிக்கவில்லை. அவர்கள் எல்லாக் காலங்களிலும் எல்லா நாடுகளிலும் மக்களின் தோள்மீது ஏறிச் சவாரி செய்திருக் கிறார்கள்.

(“The old man of the church from age to age, from land to land has ridden on the shoulders of humanity, and set at defiance all endeavours and all schemes to dislodge him” - “Popular History of Priest- Craft in ages and nations” p.96 - William Howitt).

பார்ப்பார் சமயத்தில் எவ்வாறு இடம் பெற்றனர்?
சமயத்தில் பார்ப்பார் எவ்வாறு இடம்பெற்றார்கள் என விளங்கிக் கொள்வதற்குச் சமயத்தோற்றம் எவ்வாறு உண்டாயிற்று என நாம் முதலில் அறிதல் வேண்டும். சமயம் வானத்தினின்றும் வந்து இவ்வுலகில் தோன்றவில்லை. மக்களே அதனைத் தோற்றுவித்தார்கள். மரண பயம், தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் இயற்கை உணர்ச்சி என்னும் இரண்டு காரணங்களால் சமயம் உண்டாயிற்று. முதலில் மக்கள் வியப்பும், அச்சமும் விளைக்கக் கூடிய இயற்கைப் பொருள்களைக் கடவுளெனக் கொண்டு வழி பட்டார்கள். பின்பு அவர்கள் இறந்தவர்களின் உயிர்கள் ஆவியுடலில் வாழ் கின்றனவென்றும், அவை எல்லாத் தீமையையும் செய்யவல்லன என்றும் நம்பத் தலைப்பட்டார்கள். தமது பெற்றார், சுற்றத்தவர்களின் ஆவிகளுக்கு மரியாதை, உணவு, துதி செலுத்தினால் அவை தீமை விளைக்கமாட்டா எனவும் நம்பினார்கள். இதனால், இறந்தவர் (தென்புலத்தார்) வழிபாடு உண்டாயிற்று. மிகக் கோபக் குணமுடைய ஆவிகள் இராக் காலங்களில் சிற்சில இடங்களில் தங்கி நிற்கின்றனவென்றும் அவைகளினின்றும் தப்புவதற்கு, மந்திரங்கள், பலிகள், தாயத்துக்கள் உதவி புரிகின்றனவென்றும் கொள்ளும்நம்பிக்கை இன்றும் இருந்து வருகின்றது. இறந்தவர் வழிபாடு பின்பு மனித வடிவான கடவுள் வழிபாடாயிற்று. முற்காலப் போர் வீரன் கையில், மெலியவன் ஒருவன் அகப்பட்டுக்கொண்டால் அவனிடமிருந்து உயிர் தப்புவதற்கு அவன் அழுவான், குழறுவான், குதிப்பான்; அவனுக்கு வேண்டியவற்றைக் கொடுப்பான். இவ்வாறே முற்காலமக்கள், கடவுளை வழிபட்டார்கள். மனிதன் தன் அறிவுக்கேற்பவே கடவுளையும் கற்பனை செய்தான். மிகமிக முற்காலத்தில் மனிதஊன் உண்ணும் மக்கள் தமது தலைவனைப் போன்ற வடிவில் கடவுளை வழிபட்டார்கள். ஆதலினாலேயே முற்காலக் கடவுளர், பயம் அளிக்கும் தோற்றமும், மனிதப்பலி, இரத்தப் பலிகளை ஏற்கும் இயல்பும் உடையராகவும் காணப்பட்டனர். நாட் கழியக் கழிய மக்களின் அறிவு படிப்படியே பண்பட்டது. அப்பொழுது நரபலிகள் நின்று போயின. நரபலிக்குப் பதில் விலங்குப் பலிகள் இடப்பட்டன. மேலும் மக்களின் அறிவு பண்பட்டது. அவர்கள் விலங்குகளுக்குப் பதில் தானியங் களாற் செய்த உணவையும், பழவகைகளையும், மாவினாற் செய்த விலங்கு களையும் பலியாக இட்டனர். மனிதஊன் உண்ணும் தலைவன் நாகரிக மடைந்து குடிகளை நன்கு காக்கும் அரசனான போது, மக்கள் கடவுளைக் குடிகளிடத்து அன்புள்ள அரசன் ஒருவனைப் போலும் இரக்கமுள்ள தாய் தந்தையரைப் போலும் வழிபட்டார்கள். இவ்வாறு சமயம் மக்களிடையே தோன்றி வளர்ச்சியடைந்தது.

மக்கள் கூட்டத்தினரின் தலையில் ஏறி அதிகாரத்தோடு ஒருவன் குந்தியிருக்க விரும்பினால் அவன் சமயத்தைப் பொருட்படுத்தாமல் இருக்க முடியாது. இவ்விருப்புக் கொண்ட பலர் விரைவில் தோன்றினார்கள். அவர்கள் பொதுமக்களினின்று தனியாகப் பிரிந்தனர். மற்றவர்களிலும் பார்க்கத் தமக்குக் கடவுளைப் பற்றி நன்கு தெரியும் எனக் கூறினர்.

“This cast might be like the indian Brahmans who now tries to maintain without exertion or danger, by means of the Prestige of terrifying legends-” - “Interpretation of History” - p.290 Max Nordan.

தாம் கடவுளருக்கு அண்மையிலுள்ளவர்கள் என்றனர்; தமது வேண்டுகோள்களைக் கடவுளர் ஏற்று நடத்துகின்றனர் எனப் புகன்றனர். இதனால், அவர்கள் கடவுளருக்கும், கடவுளரை வழிபடுவோருக்கும் இடையில் நிற்கும் தரகராகிய நிலையை அடைந்தனர். கடவுளருக்குக் கொடுக்கும் காணிக்கைகளும், இடும் பலிகளும், கூறும் துதிகளும் தங்கள் மூலமே செல்லுதல் வேண்டுமெனச் சாற்றினர்; மக்கள் தமக்குப் பயந்து அடங்கி நடக்கும்படி பயம் விளைவிக்கும் கட்டுக்கதைகளைக் கூறினர்.

“Mexioan priests preached dreadfully in the temples putting men into horrid fright, by which means they moved them to do whatever they dircted-” - “Footprints of the past” p.135 J. M. Wheeler

மிக முற்காலப் பழங்கதைகளிற் கூறப்படும் கடவுள், வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட பழைய அதிகாரி ஒருவனைப்பற்றி நினைவுக்குக் கொண்டு வருகின்றது. சமயத் தொடர்பான பலிகள், கிரியைகள், துதிகள், பாடல்களைப் படிக்கும்போது எங்களுக்கு உங்கள் முன்னோருடையவும், அதிகாரிகளுடையவும் வாழ்க்கை எவ்வாறிருந்ததெனக் கண் முன் தோன்றுவது போல வெளிச்சமாகின்றது. மனிதன் கடவுளைத் தனது வடிவில் உண்டாக்கவில்லை; ஒரு தலையாரி அல்லது அரசன் வடிவில் உண்டாக்கி னான். அவனுடைய கடவுளைப்பற்றிய எண்ண வளர்ச்சி அரசாட்சி முறை யில் வளர்ந்தது. மனிதஊன் உண்ணும் பழங்கால மனிதன் நாகரிகமடைந்த ஆட்சித் தலைவனாக மாறினான். அடிமைகளின் தலைகளைத் தன் கைகளால் வெட்டியெறியாமலும், இரத்தத்தில் தோயாமலும் ஆட்சிக்குட் பட்ட எல்லாப் பெண்களையும் தனது மனைவியராக்காமலும், அவன் நியாயமும், அறிவும் உடையவனாய் குடிகளுக்குச் செய்யவேண்டிய கடமை களை அறிந்து, நாட்டில் ஞாயமும் ஒழுங்கும் இருக்கும்படி செய்து மக்களைக் காப்பதில் மகிழ்ச்சியடைந்தான். ஆகவே, மனிதக் கற்பனையில் தோன்றிய கடவுள், கொடுமை, அவா, களிப்பு, கொலை முதலியவை நிறைந்த நிகிரோவ அதிகாரி போலல்லாமல் அறிவும், நீதியும் தயவுமுள்ள ஓர் அரசன்போல மாறினார். அவரை இவ்வுலகை ஆளும் அரசனைப் போலப் பெருமக்கள் சபை, (தேவராகிய) பரிவாரங்கள், அடியார்கள், மெய்க்காப்பாளர் முதலினோர் சூழ்ந்திருந்தனர்.

மனிதன் தன் வாழ்க்கையில் கொண்ட விருப்பமே சமய உணர்ச்சிக்கு ஏது. தனக்குத் துன்பம் நேர்ந்தபோது அவன் கண்ணுக்குப் புலப்படாத கடவுளின் உதவியை வேண்டினான். அவ்வுதவியைப் பெறுவதற்கு அவன் முயன்ற வகைகளிலிருந்து நூதனமான கிரியைகளும் மந்திர வித்தைகளும் தோன்றின. இதனால், அவர்கள் பொதுமக்களைத் தம் ஆணைக்குட்படுத்தி ஆளும் வல்லமையைப் பெற்றனர். இவ்வாறு தோன்றிய பார்ப்பார், சமயத்தை உண்டாக்கவில்லை. ஆனால், சமயத்தைத் தமக்குப் பலமாகப் பயன்படுத்தினர்.

அரசன் ஆட்சியும் பார்ப்பார் ஆட்சியும் இணைந்து செல்லுதல்
ஆயுதவலியாலும், ஆள்வலியாலும் மக்களை அடக்கி மக்களை ஆளும் திறமையானது கடவுள் தன்மையோடு தொடர்பு படுத்துவதால் மேலும் வலியுறும் என்றும், அதனால் பொருள் செட்டாகும் என்றும் அரசன் கருதினான். மக்கள் கடவுளை அரசன் வடிவில் வழிபட்டமையின் அரசன் கடவுளாதலும் கூடும் என அவன் கண்டான். எகிப்திலும், மேற்கு ஆசியாவி லும், அரசர் கடவுளுக்குரிய வழிபாடுகளைப் பெற்றனர். யூலியஸ் சீசர் காலத் தில் உரோம் நகரிலுள்ள கோயில்களில் அரசனுக்குப் பலிபீடமிருந்தது. அரசன் கடவுளல்லாத போது கடவுளின், திருக்குமாரனாகக் கொள்ளப் பட்டான். பெரிய அலக்சாந்தர் கடவுளின் புதல்வனாகக் கருதப்பட்டார். சர்மன், ஜப்பான், நோர்டிக் அரசர் தமது வழியைக் கடவுளிலிருந்து கூறினர்.

தம்மைக் கடவுளோடு தொடர்புடுத்திய அரசனின் போர் வீரரும், பரிவாரங்களும் ஆடம்பரமான உடை அணிந்தனர்; பலவகை அடையாளங் களைத் தரித்தனர். இத்தோற்றங்ளைக் கண்ட மக்களின் உள்ளத்தில் வியப்பு, மரியாதை, அச்சம் முதலியன தோன்றின. அரசன் பார்ப்பாரின் உரிமை களைக் காப்பாற்றுவதாக உறுதி கூறினான். அவர்கள் அரசனின் மெய்க் காவலர்களாயினர்.

அரசன் ஆயுதம் தாங்கிய வீரர்மூலம் வற்புறுத்திய கீழ்ப்படிவைப் பார்ப்பார் கோயில்களினின்று மக்களுக்கு வற்புறுத்தினர். அரசன் தனது படைப் பலத்துக்கு இரண்டாவதாகக் கோயில்களைத் தாக்குவதென்பது அரசனைத் தாக்குவது போலாகும். ஆகவே, அரசனுக்குப் பணிந்து நடப்பது கட்டாயம் என்றும், வரிகளையும், கடமைகளையும் தப்பாமல் செலுத்த வேண்டுமென்றும் அவர்கள் வற்புறுத்தி வந்தார்கள். இவ்வாறு அரசன் ஆட்சியும் பார்ப்பார் ஆட்சியும் ஒன்றுக்கு ஒன்று பக்கபலமாக, இணைந்து நடந்தன; நடக்கின்றன. சில சமயங்களில் பார்ப்பார் ஆட்சி அரசன் ஆட்சியி லும் பார்க்க ஓங்கியிருந்தது. அரசனுடைய செங்கோலைப் பிடுங்கித் தமது கையில் பிடித்து ஆட்சி புரிந்த பார்ப்பாரைப்பற்றி வரலாறுகளிற் படிக்கின் றோம். அரசனை ஆக்கும் வல்லமையும் பார்ப்பார் கையில் இருந்தது.

பார்ப்பார் ஆட்சியில் கொடுமை
தீய அரசன் ஆட்சியில் மக்கள் அடைந்த துன்பங்களுக்கு அளவே இல்லை. இவ்வாறு மக்கள் அடைந்த துன்பங்களைப் பற்றி எல்லா நாட்டு வரலாறுகளிலும் படிக்கின்றோம். ஓர் அரசன் இறந்துவிட்டால் இன்னோர் அரசன் வருவான். அவன் குடிகளுக்கு நன்மைகளும் புரிவான். பார்ப்பார் ஆட்சியோ என்றும் ஒருவகையாகவே இருந்தது. அரசன் ஆட்சியைப் போல அதற்கு முடிவும், தொடக்கமும் இருக்கவில்லை. அரசன் இறந்து விட்டாலும் கோயில்கள் என்றும் இருப்பனவாகும். பார்ப்பனர் நாள்வீதம் மக்களை அடிமைப்படுத்தி அவர்களின் செல்வத்தை உறிஞ்சி வந்தார்கள். மக்கள் இதனை உணர்ந்தார்கள். அங்குமிங்கும் புரட்சி செய்வதற்குச் சிலர் முயன்றார்கள். அவர்களின் தலைகள் கொய்யப்பட்டன. அவர்கள் உயிரோடு தீயிலிட்டுக் கொளுத்தப்பட்டனர். பூமியைச் சூரியன் சுற்றிவரவில்லை; சூரியனைப் பூமி சுற்றிவருகின்றதெனக் கூறிய கலிலியோ கலிலி சிறை யிலடைக்கப்பட்டார். முற்காலத்தில் சமயத்துக்கு மாறாக ஒருவன் நாவசைத் தால் அவன் நாக்குப் போவதுமல்லாமல் தலையுமே போய்விடும். மதப் புரட்சிகளால் ஆயிரக்கணக்கான மக்களின் தலைகள் வாளினாற் கொய்யப் பட்டு நிலத்தில் உருண்டன; ஆயிரக்கணக்கானோர் உயிரோடு தீயில் வெந்து சாம்பலானார்கள்; ஆயிரக்கணக்கானோர் கழுமரங்களில் உடல் பீறுண்டு நாய் நரிகள் இறைச்சியைப் பிடுங்கித் தின்னும்படிக் கிடந்து மாண்டார்கள். மக்களின் நாகரிகம் மிக விரைவாக முன்னேறியிருக்கும்; அதனை விரைந்து முன்னேறவிடாது தடை செய்தோர் சமய பாரகர்களெனத் தம்மைக் கூறிக் கொண்டவர், பார்ப்பாரேயாவார். சமயத்தினாலேயே மக்களுக்கு எல்லா வகை இன்னல்களும் நேர்ந்தன.

“Religion is the chief cause of all the sorrows of humanity; everywhere useless, it has only served to drive men to evil and plunge them
in brutal misery…It makes of history…and immense tableau of human
follies” - “The interpretation of History” p.213.

பார்ப்பார் மிகப்பழைமை தொட்டே மக்களைப் பிடித்து இன்னல் விளைத்து அவர்கள் தோள்மீது ஏறிச் சவாரி செய்வதை மேல்நாட்டு ஆசிரியர் ஒருவர், அராபிக் கதைகளிற் கூறப்படும் சின்பாட் கதையுடன் ஒப்பிடுகின்றனர். சின்பாட் என்பவன் கடற்பயணஞ் செய்தபோது அவன் சென்ற மரக்கலம் புயலிலகப் பட்டுப் பாறையில் மோதி உடைந்து போயிற்று. அவன் கடலில் மிதத்து கொண்டிருந்த பலகை ஒன்றைப் பிடித்துக் கொண்டு ஒரு தீவின் கரையை அடைந்தான். சிறிது நேரத்தில் அவ்விடம் வெறுப்பான தோற்றமுடைய ஒருவன் வந்தான். அவன் யாதும் பேசாது அவனுடைய தோள்களில் ஏறி உட்கார்ந்து கால்களை விலாப்புறங்களில் மாட்டிக்கொண்டு அவனைவிட்டு விலாகாதவனாயிருந்தான். தான் விரும்பியபடி செல்லா விட்டால் அவன் சின்பாட்டைக் கைகளால் குத்தினான்; கால்களால் அடித் தான். அவனை அப்புறப்படுத்த முடியவில்லை. நித்திரையிலும் அவன் சின்பாட்டை விட்டுப் பிரியவில்லை. ஒருநாள் சின்பாட் மலை அடிவாரத்தில் சென்றான். அங்கு முந்திரிகைக் கொடிகளில் பழங்கள் பழுத்துக் தொங்கின. பக்கத்தே நீற்றுப் பூசினிக் கொடிகளில் காய்களும் இருந்தன. அவன் சில காய்களைப் பறித்து அவைகளில் துளை செய்து உள்ளேயிருந்த விதைகளை எல்லாம் வெளிப்படுத்தினான். பின் அவைகளுள் முந்திரிகைப் பழங்களைப் பிழிந்து சாற்றை நிரப்பி வைத்தான். சில நாட்களின் பின் அந்தச் சாற்றை அவன் குடித்தான்; தோள் மீதிருந்த மனிதனுக்கும் கொடுத்தான். அது மிகவும் சுவை கொடுத்தது. அம்மனிதன் மேலும் மேலும் அவ்விரசத்தை வாங்கிக் குடித்தான். அதனால் அவனுக்கு மயக்கம் உண்டாகிவிட்டது. அப்பொழுது சின்பாட் அம்மனிதனின் பிடிகளை விடுவித்து அவனைக் கீழே தள்ளினான். பின்பு அவன் தலையில் பெரிய பாறாங்கல்லை எடுத்துப் போட்டுவிட்டுக் கடற்கரைக்கு ஓடிச் சென்றான். கரையில் ஒரு மரக்கலம் தென்பட்டது. அவன் சத்தமிட்டான். மரக்கலம் கிட்டவந்தது. அவன் அதில் ஏறிக்கொண்டு தனது ஊர் சேர்ந்தான். இது நல்ல உவமையாகவே தோன்றுகிறது.

பார்ப்பாரத் தொழில் இழிந்ததே பழக்கத்தால் உயர்ந்ததெனக் கொள்ளப்படுகின்றது
பார்ப்பனத் தொழில் என்பது பொருளை உறிஞ்சுவதற்காகச் சூழ்ந்து எழுந்த ஏமாற்றுத் தொழில் என்பது ஆராய்ந்து பார்க்கும்போது எளிதில் புலப்படுகின்றது. ஏமாற்றுத் தொழிலாயினும் அது எப்பொழுதும் அவ்வாறு தோன்றமாட்டாது. பழங்காலம் முதல் தொடர்ந்துவரும் தீய வழக்கங்கள் தீமையுடையனவென்று சடுதியில் தோன்றுவதில்லை. நன்றாக உறுதிப்பட்ட கோயிற்கட்டளைகளும், கிரியையும், அவைகளின் தொடக்கமும் கருத்து முதலியவைகளும் ஆராயப்படுவதில்லை. பார்ப்பார் தாம் படித்திருக்கின்ற வும், படிக்க வேண்டியவும் சமயக்கொள்கைகளை நன்றாக நம்புகிறார்கள். பார்ப்பாரத் தொழில் என்பது அவர்களுக்கு ஒரு மதிப்பு. வருவாய் அளிக்கும் ஏனைய தொழில்களைப் போலவே அதுவும் ஒன்று. அது அவர்களுக்கு ஏற்றதாயும், ஒழுங்கான வருவாய் தருவதாயும், சில வகைகளில் பல வாய்ப்புக்கள் அளிப்பதாயுமுள்ளது. பார்ப்பனத் தொழிலால் அவர்கள் அடையும் இன்பம் எவ்வகையான மாறுபட்ட எண்ணங்களாலும் கலைக்கப் படுவதில்லை. கடவுளை வழிபடும் மக்கள் பக்தி காரணமாகக் கொடுக்கும் பொருளுக்குத் தக்க கைம்மாறு அளிக்கிறார்களோ என்று நினைத்து அவர்கள் சிறிது அயர்தல் கூடும். ஒரு வழக்கம் தீயதாயினும் சமூகத்தாலும் ஆட்சியினராலும் ஒப்புக்கொள்ளப்பட்டால் அது முற்போக்குக்கு உரிய தெனக் கொள்ளப்படுகின்றது. ஆகவே, இன்று பார்ப்பானாகவும், நேர்மை யுடையவனாகவும் இருக்க முடிகிறது. தனது தொழில் மக்களின் அறி யாமையை வாய்ப்பாகக் கொண்டு அவர்கள் பொருளை உண்டு வாழ்வதற்கு உண்டானதென்று அவன் உணரமாட்டான்! (The Interpretation of History p.210)

சுமேரியப் பார்ப்பனர்
சுமேரியாவில் ஒவ்வொரு நகரமும் ஒவ்வொரு பார்ப்பானால் ஆளப் பட்டது. அவன் பதேசி (Patese) எனப்பட்டான். அரசாங்கச் சட்டம் ஒவ்வொன் றும் சமயத்தினால் கட்டப்பட்டிருந்தது. கோயில்களில் தெய்வங்கள் இருந்தன. இவைகளுக்கு உணவு, மனைவியர், செல்வம் முதலியன அளிக் கப்பட்டன. குடியா என்னும் இடத்தில் சில களிமண் சுவடிகள் கிடைத்தன. அவைகளைக் கொண்டு அக்காலத் தெய்வங்கள் எருது, ஆடு, புறா, கோழி, தாரா, மீன், பேரீந்தின் பழம், அத்திப்பழம், வெள்ளரிக்காய், வெண்ணெய், எண்ணெய், பணியாரம் முதலியவைகளை அதிகம் விரும்பின எனத் தெரி கின்றது. இதனால், அக்காலச் சுமேரியரின் அடுக்களையில் பயன்படுத்தப் பட்ட உணவுப் பண்டங்கள் எவை எனத் தெரிக்கின்றது. தொடக்கத்தில் கடவுளர் மனிதஊனை விரும்பிக் கேட்டனர். மனித ஒழுக்கம் சீர்பட்டபோது மக்கள் மனிதனுக்குப் பதில் விலங்குகளைக் கொடுத்தனர். அங்குக் கிடைத்த களிமண் ஏட்டில் மனிதனுக்குப் பதில் ஆட்டுக்குட்டி கொடுக்கப்பட்டதெனச் சொல்லப்பட்டது.

இவ்வகைச் செல்வங்களை நிறையப் பெற்றமையால் நகரங்களில் வாழ்ந்த பார்ப்பார் பெரும் செல்வவான்களாயினர். பெரும்பாலும் நடை முறையில் பார்ப்பாரே ஆளுவோராயிருந்தனர். அரசனுடைய அதிகாரம் எவ்வளவு, பார்ப்பாரின் அதிகாரம் எவ்வளவு என்று அறிய முடியாதபடி அவர்களின் அதிகாரம் ஓங்கியிருந்தது.

‘உருக்கினா’ என்னும் சுமேரிய அரசன் பார்ப்பாருக்கு மாறாகப் பெரிய புரட்சி செய்தான். குடிசனங்களின் செல்வத்தைக் கவர்வதாகவும், கைக்கூலி பெறுவதாகவும் அவன் பார்ப்பாரைக் குற்றஞ்சாட்டினான். கோயில்களில் கொடுக்கப்படும் பொருளைப் பார்ப்பார் பயன் கொள்ளாது காக்கும்படியும் அவன் சட்டம் செய்தான். அவன் இறந்ததும் பழையபடியும் பார்ப்பாரின் ஆட்சி ஓங்கிற்று! (The story of civilization)

எகிப்தியப் பார்ப்பார்
எகிப்திலே அரசனுடைய அதிகாரத்திலும் மேலான அதிகாரம் படைத்த ஒரு கூட்டத்தினர் விளங்கினார்கள். அவர்கள் பார்ப்பார். எல்லா நாடுகளிலும் போல அரசாங்கத்துக்கும், பார்ப்பாருக்குமிடையில் அதிகாரத் தின் பொருட்டு மல்லுக்கட்டுதல் இருந்து வந்தது. ஒவ்வொரு போரிலும் கிடைக்கும் கொள்ளைப் பொருள்களின் பெரும்பாகம் பார்ப்பாரையும், கோயிலையும் அடைந்தன. மூன்றாம் இராம்சேஸ் அரசன் காலத்தில் எகிப்தியக் கோயில்களில் 1,07,000 அடிமைகள் இருந்தார்கள். இது எகிப்தின் முழுமக்கள் தொகையில் பதின்மூன்றில் ஒன்றாகும். பார்ப்பாரிடம் 7,50,000 ஏக்கர் பயிரிடும் நிலம் இருந்தது. இது எகிப்து முழுமையிலும் பயிரிடும் நிலத்தில் ஏழில் ஒரு பகுதியாகும். அவர்களிடம் 5,00,000 ஆடு மாடுகள் இருந்தன. எகிப்து, சிரியா என்னும் நாடுகளிலுள்ள 169 பட்டினங்களின் வருவாய் அவர்களை அடைந்தன. இராம்சே அரசன், அம்மன் கோயிலின் பார்ப்பாருக்கு 32,000 கிலோ கிராம் பொன்னும், பத்து இலட்சம் கிலோ கிராம் வெள்ளியும், ஆண்டுதோறும் 1,55,000 மூடை தானியங்களும் வழங்கினான். அரசாங்க வேலையாட்களுக்குக் கூலி கொடுக்கும் பொருட்டுக் கரு வூலத்தைப் பார்த்தபோது அங்கு யாதும் காணப்படவில்லை. தெய்வங்கள் அதிகம் அதிகமாக உண்ணும்போது மக்கள் அதிகம் அதிகமாகப் பட்டினி கிடந்தார்கள். காலம் செல்லச் செல்ல அரசர்கள் பார்ப்பாரின் ஏவலாள ரானார்கள். இராமசிட் என்னும் அரசனின் செங்கோலைப் பிடுங்கி அம்மன் கோயிலின் தலைமைப் பார்ப்பான் ஆட்சிபுரிந்தான்.

பாபிலோனியப் பார்ப்பார்
பாபிலோனில் ஞாயத் தீர்ப்பாளர் (நியாயதிபதிகள்) பார்ப்பாரா யிருந்தனர். அரசனின் அதிகாரம் கோயிலால் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. உண்மையில் அரசன் நகரத்திலுள்ள கடவுளின் வேலையாளாக இருந்தான். தெய்வத்தின் பெயரால் வரி தண்டப்பட்டது. பார்ப்பாரின் உடன்பாடு இல்லாத அளவில் அரசன் அரசனாக மதிக்கப்படவில்லை. இதனைப் பின்பற்றியே இன்றைய முடிசூட்டுக்களில் புரோகிதன் பங்கு பெறுகிறான். தலைமுறை தலைமுறைகளில் கோயில்களில் செல்வம் திரண்டு பெருகிற்று. செல்வர் தமது ஊதியங்களின் ஒரு பகுதியைக் கோயிலுக்கு வழங்கினர். அரசர், கடவுளரின் தயவை நாடிக் கோயில்கள் எடுத்தனர். அவைகளுக்குத் தள வாடங்கள், உணவு, அடிமை, நிலம் அரச வருவாயில் ஒரு பகுதி முதலியவை களைக் கொடுத்தனர். போர்களில் வெற்றி கிடைத்தால், போரில் பிடித்து அடிமையாக்கப்பட்டவர்களில் பெரும் பகுதியினர் கோயில்களுக்கு விடப்பட்டனர். போரில் கிடைத்த கொள்ளைப் பொருளின் பெரும் பகுதியும் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டன. சிறப்பாக ஏதும் அதிட்டம் உண்டானால் அரசன் சிறந்த கொடைகளைக் கடவுளுக்கு வழங்கினான். சில நிலங்களி லிருந்து திறையாகப் பேரீந்தின் பழம், தானியம், பழவகைகள் முதலியன கோயிலைச் சேர்ந்தன. அவ்வாறு கொடுக்கத் தவறியபோது நிலங்கள் பார்ப்பாரால் பறிக்கப்பட்டன. இவ்வாறு நிலங்கள் பார்ப்பாரை அடைந்தன. இவ்வுலக நன்மைகளைக் கருதிச் செல்வரும், வறியரும் கோயில்களுக்குப் பொருள் கொடுத்தனர். பொன், வெள்ளி, செம்பு, இரத்தினக்கற்கள் முதலியவை கோயிற் களஞ்சியங்களில் குவிந்து கிடந்தன.

பார்ப்பார் இச்செல்வத்தை நேராகப் பயன்படுத்தமாட்டாமையால் ஊதியமளிக்கக் கூடிய பயிர்ச் செய்கை, கைத்தொழில், முதலியவைகளின் பொருட்டுப் பயன்படுத்தினர். அவர்களிடத்தில் அதிக நிலம் மாத்திரமன்று, பல அடிமைகளும் இருந்தார்கள். அவர்கள் அடிமைகளைக் கூலிக்கு வேலை செய்யும்படிப் போக்கி ஊதியம் பெற்றார்கள். வாத்தியம் வாசித்தல் முதல் மதுவடித்தல் வரையிலுள்ள தொழில்களுக்கு அவர்கள் பயன்படுத்தப் பட்டனர். பார்ப்பாரிடத்துப் பலர் பாதுகாப்பின் பொருட்டுப் பணத்தைக் கொடுத்தார்கள். இவர்கள் பொதுவாக வட்டிக்குப் பணம் கொடுப்பவர்களி லும் பார்க்கக் குறைந்த நிபந்தனையில் பணத்தைக் கொடுத்ததார்கள். இவர்கள் கணக்கு எழுதுபவர்களாகவும், ஆவணங்கள் தீட்டுபவர்களாகவும், வழக்குகளை விளங்கித் தீர்ப்பளிப்பவர்களாகவும், அரசாங்க மூல ஆவணங் களைப் பாதுகாப்போராகவும், பதிவு செய்யப்பட்ட வாணிகத்தொழில் புரிவோ ராகவும் இருந்தனர்.

மிகமிக இன்றியமையாதபோது அரசன் கோயிற் பணத்தைத் தனது தேவைகளுக்குப் பயன்படுத்தினான். இது மிகவும் ஆபத்தானது. கோயிற் பணத்தைத் தீண்டுவோர்மீது பார்ப்பார் பொல்லாத சாபம் இட்டார்கள். இவர்கள் கோயிற் சொத்தில் அணுவளவேனும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அரசனுக்கு மக்களிடத்திலுள்ளதிலும் பார்க்கப் பார்ப்பாருக்கு அவர்களிடத்தி லுள்ள செல்வாக்குப் பெரிதாக இருந்தது. பார்ப்பார் நினைத்தால் பொது மக்களோடு சேர்ந்து அரசனை ஆட்சியினின்று விழுத்தி விடுதல் கூடும். அவர்களின் பதவி எப்பொழுதும் உறுதியானது; அரசன் இறந்துபோனாலும் தெய்வங்கள் இருந்தன. தெரிவு செய்து எடுக்கப்படுதல், போரால் உண்டாகும் கெடுதிகள் போன்றவைகளுக்குத் தப்பி இவர்கள் உறுதியான சமய ஆட்சியைக் கட்டினார்கள். இது இன்றுவரையும் நிலைபெறுகின்றது. இவ் வகையில் பார்ப்பார் ஓங்குவதைத் தடுக்க முடியாமல் இருந்தது. கிறித்து பிறப்ப தற்குத் தொளாயிரம் ஆண்டுகளுக்குமுன் எடுக்கப்பட்ட கணக்கின்படி, அங்கு 65,000 கடவுளர் (கோயில்கள்) இருந்தனர். ஒவ்வொரு பட்டினத்தை யும் தலைமை கொண்டு கிராமங்களிலும், கிராமங்களின் பகுதிகளிலும் சிறு தெய்வங்கள் இருந்தன. இத்தெய்வங்கள் மக்களிலிருந்து தொலைவில் இருக்கவில்லை. அவைகளுக்கு நிலத்தில் கோயில்கள் இருந்தன. அவை அதிக விருப்போடு உணவு உண்டன; பக்தியுள்ள பெண்களிடம் இராக் காலத்தில் சென்று அவர்களுக்குக் கருப்பதானஞ் செய்தன.

பாபிலோனிய சமயத்தின் மேலான இலக்குத் தேவர்களுக்குப் பலி செலுத்துவதே; பலி என்பது பழக்கம் வாய்ந்த பார்ப்பானால் சிக்கலான கிரியைகள் மூலம் தேவருக்குக் கொடுக்கும் உணவு ஆகும். அவன் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் செயலும் புனிதமானவை. பாபிலோனியரின் சமய மென்பது நல்ல வாழ்க்கையிலும் பார்க்கச் சரியான கிரியை அளவில் இருந்தது. ஒருவன் உலகில் செய்யும் மேலான கடமை கடவுளுக்குப் பலி செலுத்து வதும், சரியான துதி கூறுவதும் ஆகும். அவன் விழுந்து போன பகைவனின் கண்ணைப் பிடுங்கலாம்; கை கால்களை வெட்டலாம்; அவைகளால் பாவம் நேராது. கடவுளருக்கு முன்னால் நறும்புகையிடுதல், அவர்களை அழகிய அணிகலன்களால் அலங்கரித்தல், தங்கள் குமாரத்திகளின் கன்னிமையை இஸ்ரர் கடவுளின் விழாவில் பலியிடுதல், கடவுளுக்கு முன்னால் உணவும் மதுவும் படைத்தல், பார்ப்பாருக்குத் தயாளமாகக் கொடுத்தல் முதலியன பாபிலோனியரின் உயர்ந்த சமயக் கருத்துக்களாம்.

அசீரியப் பார்ப்பார்
அசீரிய அரசன் தனது படைக்கு அடுத்தபடியில் கோயிலை நம்பினான். வன் பார்ப்பாருக்குத் தயாளமாகப் பொருள் வழங்கினான். இராச்சியம் ‘அசுர்’ என்ற கடவுள் பேரில் இருந்தது. வரி, வருவாய் முதலியன அக்கடவுளின் கருவூலத்தை நிறைக்கும் பொருட்டுத் தண்டப்பட்டன. பகைவரிடமிருந்து கொள்ளையிடும் பொருளையும், புகழையும் அசுர்க் கடவுளுக்குக் கொடுப்பதற்காகப் போர்கள் செய்யப்பட்டன. அரசன், தான் கடவுளின் புதல்வன் எனச் சொல்லிக் கொண்டான்.

யூதேயாவில் பார்ப்பார்
செமித்தியர்களாகிய இவர்கள் நரபலிகள் இட்டு வந்தார்கள்; பின்பு விலங்குப் பலிகள் இட்டார்கள். ஆடு மாடுகளின் தலைக் கன்றுகள், குட்டிகள், பலியிடப்பட்டன. தொடக்கத்தில் பார்ப்பானால் கொன்று ஆசீர்வதித்துக் கடவுளுக்குப் பலியாக வைக்கப்படாத விலங்குகள் உண்ணத் தகுதியற்றவை களாகக் கொள்ளப்பட்டன. விருத்த சேதனம் பலி வகைகளில் ஒன்றாக இருந்தது. பார்ப்பார் மாத்திரம் நன்றாகப் பலியைச் செலுத்தவும், கிரியை களைப் பற்றியும் அவைகளின் பலன்களைப்பற்றியும் கூறவும் முடியும். ‘லெவி’ எனப்பட்ட குலத்தில் தோன்றியவர்களல்லாத மற்றெவரும் பார்ப்பா ராக வர முடியாது. அவர்களுக்கு, வரிகள் எல்லாம் விதித்திருந்தார்கள். கடவுளுக்குக் கொடுக்கப்படும் பொருள்களில் தமக்கு வேண்டியவற்றை அவர்கள் பயன்படுத்தினார்கள். கோயில்களில் பெரும் செல்வம் திரண்டது. எருசேலம் ஆலயத்தில் வாழ்ந்த பார்ப்பார் தீப்ஸ் என்ற பிரிவினர் ஆவர். பாபிலோன் பட்டினங்களில் வாழ்ந்த தம்மினத்தவர்களை ஒப்ப அரசனிலும் பார்க்க அதிகாரமுடையவர்களானார்கள்.

யூதேய பார்ப்பார் உரோம்நகர்ப் போப்புகளைப் போல அரசன் செய்ய முடியாதவைகளைச் செய்யும் திறமையுடையவர்களானார்கள்.

ஜப்பானியப் பார்ப்பார்
நாட்டில் மற்றத் தொழில்கள் குன்றியபோதும் பார்ப்பனத்தொழில் செழிப்படைந்தது. பார்ப்பாரின் செல்வம் தலைமுறைக்குத் தலைமுறை அதிகப்பட்டது. மக்களின் வறுமை ஒரே வகையாக இருந்து வந்தது. நாற்பது வயது உடைய ஒருவன் நாற்பது கோயில்களுக்கு அவன் பேரால் பூசை செய் வித்தால் அவனுக்குப் பத்து ஆண்டு வாழ்நாள் பெருகும் என்றும், ஐம்பது வயதுக்குடையவன் ஐம்பது கோயில்களுக்கு அவ்வாறு செய்யின் பத்து ஆண்டுகள் பெருகுமென்றும், அறுபது வயதுடையவன் அறுபது கோயில் களுக்கு இவ்வாறு செய்தால் மேலும் பத்து ஆண்டுகள் பெருகுமென்றும் பார்ப்பார் உறுதி கூறினார்கள். இவ்வாறு ஆயுளை விலைக்கு வாங்கும் பொருட்டு மக்கள் பெருந்தொகைப் பணத்தைக் கோயில்களுக்குக் கொடுத்து வந்தார்கள். தொகுகுவாக் கூட்டத்தைச் சேர்ந்த பார்ப்பார், மதுவருந்தி னார்கள்; வைப்பாட்டி வைத்திருந்தார்கள்; பையன்களை விலை கொடுத்து வாங்கினார்கள்; அவர்களின் புருவ மயிரை மழித்தார்கள்; முகத்துக்குப் பொடி பூசினார்கள்; அவர்களைக் கூடாத செயலுக்குப் பயன்படுத்தினார்கள்.

சீரிய அசீரியப் பார்ப்பார்
(இது ‘A popular History of priest- craft in all ages and nations’ என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. இராக்காலத்தில் பலிபீடத்தின் முன்னால் மணலைப் பரப்பி வைத்து அதன்மீது பதிந்திருக்கும் தமது மனைவி மக்களுடைய பாதச் சுவடுகளையும் கடவுளரின் அடிகள் எனக் காலையில் மக்களுக்குக் காட்டினார்கள்.) பினீசிரியரின் மெலோச் என்னும் கடவுள் உலோகத்தினால் செய்யப்பட்ட பெரிய உருவம் ஆகும். அது குந்தி இருக்கும் வடிவில் அமைக்கப்பட்டது. பலியிடும் காலத்தில் அது சிவப்பேறும்படி சூடாக்கப்படுகின்றது. சிறு குழந்தைகள் பலியிடும் பொருட்டுக் கொண்டு வரப்பட்டார்கள். அவர்கள் எரிகின்ற கடவுளின் கையில் வைக்கப்பட்டார்கள். அவர்கள் மிகவும் வேதனையோடு கதறி இறந்தார்கள். அப்பொழுது எழுகின்ற பரிதாபமான கூச்சலை அமுக்கும்படி மேளங்கள், சல்லரிகளை அடித்தும், கொம்பு எக்காளங்களை ஊதியும் பார்ப்பாரும் அவர்களின் பரிவாரங்களும் பெரிய சத்தம் செய்தார்கள். இந்தியாவைப் போலவே இந்நாடுகளிலும் இடபம் (எருது) வழிபடப்பட்டது. குறிக்கப்பட்ட சில காலங்களில் பெரிய தீ வளர்த்து மனிதப் பலிகள் இடப்பட்டன.

எரதோதசு (Heradorus) கூறியிருப்பது வருமாறு:-
“பாபிலோனில் உள்ள ‘பேலஸ்’ என்னும் கோயிலின் ஓர் அறையில் நன்கு அலங்கரிக்கப்பட்ட கட்டில் ஒன்று வைக்கப்பட்டு உள்ளது. அதன் அருகில் கட்டில் பொன்னால் செய்யப்பட்ட மேசை ஒன்று இடப்பட்டுள்ளது; ஆனால், அங்குக் கடவுள் வடிவம் இருக்கவில்லை. ஆடவன் எவனாவது அங்குப் படுத்து உறங்குதல் ஆகாது. கன்னிப் பெண் ஒருத்தி அக்கட்டில் மீது இரவில் படுத்தாள். தெய்வம், கால்திய மக்கள் எல்லோரிலும் வடிவழகால் சிறந்த ஒரு பெண்ணைத் தெரிந்து எடுத்துக் கொள்ளுகிறதெனச் சால்தியப் பார்ப்பார் கூறினார்கள். தெய்வம் இராக்காலத்தில் அக்கட்டிலில் படுக்கின்ற தெனவும் அவர்கள் உறுதியாகப் புகன்றனர். இவ்வகையாகவே தீப்ஸ் என்னும் எகிப்திய தலைநகரத்துப் பார்ப்பாரும் கூறினார்கள். இப்பெண்கள் ஆடவரோடு தொடர்பு வைத்திருப்பதில்லை என மக்கள் நம்பினார்கள். இலையாசியவிலும் இவ்வகை வழக்கு இருந்தது. இங்கு ஒழுங்காக வெளிப் பாடு கூறப்படவில்லை; கடவுளோடு பேசும் அவசியம் உண்டானபோது அப்பெண், வரும் இரவில் கோயிலில் தங்கியிருக்கக் கடமைப்பட்டிருந்தாள். தமது கூட்டத்தினர் எல்லோருக்காவும் கடவுளுக்கு அழகிய பெண்ணைத் தெரிந்தெடுப்பது என்னும் தலைப்பின் கீழ் பார்ப்பார் கடவுளின் பெயரால் கட்டுக்கடங்காத தமது காம இச்சையைத் தணித்துக் கொண்டனர்.”

“யோசெபுஸ்” என்னும் யூத சரித்திராசிரியரால் (கி.பி. 37) கிரீசில் வழக்கமாக நடைபெற்ற இவ்வகை நிகழ்ச்சி ஒன்று கூறப்பட்டுள்ளது. அது மிக வியப்பானது. உயர் குலத்தவன் ஒருவன் தான் முன்பு தொடர்பு வைத் திருந்த மணமான பெண் ஒருத்தியைக், கடவுள் விரும்புவதாகக் கூறிக் கோயி லுக்கு அழைக்கும்படிப் பார்ப்பாரைத் தூண்டினான். அவ்வாறு கோயிலுக்குக் கொண்டு வந்த பெண்ணைப் பார்ப்பாரும் இவ்வுயர் குலத்தவனும் மாத்திர மல்லாமல் அதிகாரத்திலுள்ளவர்கள் எல்லாரும் அனுபவித்தார்கள். இது எப்பொழுதும் பார்ப்பாரின் வழக்கமாகும். அசீரியா பாபிலோனிய ஆட்சியுள் அடங்கியிருந்த காலத்தில், மிலித்தியா என்னும் பாபிலோனியப் பெண் தெய்வத்தின் கோயிலில் நடந்த ஆண் - பெண் சேர்க்கை சம்பந்தமான இடக்கரான செயல் அளவு கடந்திருந்தது. மணமான அல்லது மணமாகாத எல்லாப் பெண்களும் தமது வாழ்நாளில் ஒருமுறை மிலித்தியாவின் கோயிலில் சென்று தாம் முதல் எதிர்ப்படுகின்ற ஒருவனுக்குத் தமது மானத்தை விற்று அதனால் கிடைக்கும் பணத்தைப் பார்ப்பாரின் வருமானம் மிகும்படி கோயில் உண்டியில் போடவேண்டியிருந்தது. இவ்வழக்கத்தைக் குறித்து எரதோதசு மாத்திரமல்லர், வேறு பலரும் கூறியுள்ளார்கள்.

தெய்வங்கள் இராக்காலத்தில் வந்து உணவுகளை உண்கின்றன எனப் பார்ப்பார் கூறினார். இராக்காலத்தில் பார்ப்பார் தமது மனைவி மக்களோடு தெய்வத்துக்குப் படைக்கப்பட்ட நேர்த்தியான உணவுகளை எல்லாம் வயிறாரப் புசித்தார்கள்.

ஐரோப்பிய நாடுகளின் பார்ப்பார்
துருயித்தியர் (Druids) என்னும் பார்ப்பார் பிரான்சிலும், இங்கிலாந்தி லும் வாழ்ந்தார்கள். இவர்கள் ஒருபோதும் போரில் சேவை புரிவதில்லை. இவர்கள் வரிகள் எதுவும் கொடுப்பதும் இல்லை. இவர்கள் சுள்ளிகளைக் குவித்துப் பெரிய தீ வளர்த்தார்கள். அதில் மனிதரை உயிரோடு பலியாக இட்டார்கள். கொள்ளை, களவு முதலிய குற்றங்களுக்காகத் தண்டிக்கப் பட்டவர்களே இவ்வாறு பயன்படுத்தப்பட்டனர். இவ்வகையினரின் பலிகளைத்தான் தேவர்கள் விரும்புவார்கள் என அவர்கள் நினைத்தார்கள். அவ்வகையினர் கிடைக்காதபோது குற்றம் அறியாத மக்கள் பலியிடப் பட்டார்கள்.

ஸ்காந்தினேவியாவில் ‘விரிக்கா’ என்னும் பெண் தெய்வத்தை இராச குமாரிகள் சேவித்தார்கள். இவர்கள் வெளிப்பாடு கூறினார்கள். கன்னிமையக் காப்பாற்றினர்கள். தூய தீயை அணையாதபடிக் காத்தார்கள். பார்ப்பார் கடவுளின் எண்ணங்களைத் தாம் கூறுவதாக நடித்தனர். சில காலங்களில் கடவுளின் பெயரால் அரசனுடைய இரத்தத்தையும் கேட்டுப் பெற்றார்கள். இவ்வாறு தெய்வத்துக்கு இடப்பட்ட மனிதப் பலிகளின் உடல்கள் எரிக்கப் பட்டன; அல்லது கோயிலுக்குப் பக்கத்தேயுள்ள தூய சோலையிலுள்ள மரங்களில் கட்டித் தொங்கவிடப்பட்டன. இரத்தத்தின் ஒரு பகுதியைப் பார்ப்பார் மக்கள்மீதும், சோலையிலும், கோயிற் சுவர், மனைகள்மீதும் தெளித்தனர்.

‘உன்வெல்’ என்னும் ஆலயத்தில் ‘தொர்’ கடவுளின் விழாவில் ஆண் - பெண் தொடர்பான தடைகள் நீக்கப்பட்டிருந்தன. அதனால், அது காம விழாவாகக் காட்சியளித்தது. அங்கு விரும்பத்தகாத ஆட்டங்களும், செயல்களும், நடிப்புகளும் நடைபெற்றன.

கிரீசில் மனிதப் பலிகள் இடப்பட்டன. சனித் தெய்வத்துக்கு ஆண்டு தோறும் குழந்தைகள் பலியிடப்பட்டன. ஏகேஸ் (Augurs) என்னும் பார்ப்பார், தாம் கடவுளின் நினைவுகளைக் கூற முடியுமெனப் புகன்றனர். பறவைகள் பறப்பதையும் பலியிடப்பட்ட விலங்குகளின் குடல்களையும் பார்த்து அவர்கள் அவ்வாறு கூறினார்கள். கோயில்களில் விரும்பத்தகாத ஆண் - பெண் சேர்க்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. (Bacchanal, frantic with midnight intemperance polluted the secret sancutuary, and prostitutions are throned upon the very altars of the gods - lbid p.66)

அமெரிக்கப் பார்ப்பார்
மெக்சிக்கோவில் கோயில்களில் மனிதப் பலிகள் இடப்பட்டன. கோயில்களில் கன்னிப் பெண்கள் இருந்தார்கள். போரில் பிடிக்கப்பட்ட வர்கள் கோயில்களில் பலியிடப்பட்டார்கள். ஓர் ஆண்டில் இருபதினாயிரம் நரபலிகள் வரை இடப்பட்டன.

உரோமாபுரிப் பார்ப்பார்
உரோமாபுரிப் பார்ப்பாரின் அதிகாரம் உலக முழுமையிலுமுள்ள பார்ப்பாரின் அதிகாரம் எல்லாம் திரண்டுருண்டு வடிவு கொண்டதை ஒத்தது. உரோமாபுரித் தலைமைப் பார்ப்பாரின் அதிகாரம் அரசனின் அதிகாரத்தை யும் தன்னுள் அடக்கிற்று. பார்ப்பானுடைய எண்ணத்துக்கு மாறாக அரசனின் ஆணை செல்ல முடியாமல் இருந்தது. அரசனை ஆக்கவோ அழிக்கவோ பார்பானால் முடியும். பாப்பு எனப்பட்ட பார்ப்பானின் கட்டளைக்குக் கீழ்ப் படியாதவர்களும், அவன் சமயத்தை நம்பாதவர்களும் தீயிலிட்டுக் கொளுத் தப்பட்டார்கள், இருட்டறையில் அடைக்கப்பட்டார்கள். இவ்வாறு கல்வியாற் சிறந்த பலர் தீக்கு இரையானார்கள். சூரியன் பூமியைச் சுற்றி வரவில்லை. பூமியே சூரியனைச் சுற்றி வருகிறதெனக் கூறிய கலிலியோவை (1564-1642) ஏழாம் ஏர்பன் என்னும் உரோமாபுரிப் பார்ப்பான் சிறையிலடைத்ததோடு கலிலியோவின் நூலையும் எவரும் படித்தல் கூடாதெனச் சட்டம் செய்தான். சுவர்க்க, நரகக் கதவுகளின் தாழ்க்கோல் தம்மிடம் இருப்பதாகப் பார்ப்பான் கூறினான். மக்கள் செய்யும் பாவங்களைப் பணத்தைப் பெற்றுக்கொண்டு மன்னிக்கும் ஆற்றல் தனக்கு உண்டெனக் கூறினான். இவ்வுலகில் மாத்திர மன்று மறு உலகிலும் தனது ஆணை நடக்கின்றதெனப் புகன்றான். (The priest had not only power to hear sins, but also to parden them. He could shut up in hell, or let out; he was not content with enslaving his followers of this world - he carried his influence to the next and even invented a world from the torture of which no man can escape without his permission - lbid p. 109)

“திருமணம், உரிமை, ஒழுக்க சம்பந்தம், சமயத்தில் நம்பிக்கை யின்மை, சமயத்தில் கொள்கை மாறுபடுதல், மந்திரவித்தை, கோயில்களில் ஒழுக்கக்கேடு போன்ற பல வகையான குற்றங்களுக்கு உரோமன் கத்தோலிக்கக் கோயில்கள் விலங்குத் தண்டனை விதித்தன. சமயத்தை நம்பாதவர்கள் வழக்கமாகத் தீயிலிட்டுக் கொளுத்தப்பட்டார்கள்.” (The new age encyclopaedia Vol IV-p- 132) ‘யான் அவ் ஆக்’ (ஜோன் ஆஃப் ஆர்க்) என்னும் பெரிய வீரப்பெண் மந்திர வித்தைக்காரி என்று குற்றம் சாட்டப்பட்டுப் பார்ப்பாரால் எரிக்கப்பட்டாள். இவளை ஒப்ப, ‘சியர்தானோ போனோ’, ‘மிக்சல் சேர் வாஸ்’ முதலிய பெரிய அறிவாளிகள் தீயிலிட்டு எரிக்கப்பட்டனர். (Religion has employed every means for the destruction of its critics, from the poisoned cup forced on Socrates for trumped up reasons of state that were really reasons of religion is the stake at which Giordano Bruno and Michael Servetus were burnt - The interpretation of History - p215)

இப்பார்ப்பார் மதத்தை, மார்டின் லூதர் என்னும் செர்மானியர் (கி.பி. 1483-1546) எதிர்த்தார். பாவ மன்னிப்பு விற்பனை, மறுமையில் நல்லிடங்கள் பெறும் சீட்டு விற்பனை போன்றவைகளை எதிர்த்து இவர் மக்களுக்குப் போதனை செய்தார். கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் பார்ப்பார் திருமணம் செய்து கொள்ளுதல் கூடாதென்னும் சட்டம் உண்டாயிற்று. அதனால் நாடெங்கும் ஒழுக்கக் கேடுகள் பரவின. கற்புக்காக விரதமிருக்கும் பெண் களில் ஒருத்தியைக் கோயிற் பார்ப்பான் தனது படுக்கையில் வைத்திருப்பது அக் காலச் சாதாரண நிகழ்ச்சி. இது கட்டில் நின்ற எருதுகளை அவிழ்த்துப் பசுக் கூட்டத்தில் விட்டதுபோலாயிற்று.

இந்தியப் பார்ப்பார்
இந்தியப் பார்ப்பாரைப் பற்றி நாம் எல்லோரும் அறிவோம். ஒரு நூற்றாண்டுக்கு முன் இந்தியப் பார்ப்பாரைக் குறித்து மேல் நாட்டவர்கள் எவ்வாறு விளக்கியிருந்தார்கள் என்பதை அறிவது மிக இன்பமளிப்பதாகும். ‘ஹேவிட்’ என்பார் நூறு ஆண்டுகளுக்குமுன் “உலகம் முழுமையிலும் பார்ப்பாரத் தொழில்” என்னும் நூலில் எழுதியிருப்பதன் சுருக்கத்தை ஈண்டுத் தருகின்றோம்.

“எல்லா நாடுகளிலும் பார்ப்பனத் தொழில் பார்ப்பாரை அதிகாரமும் கவுரவமும் உடையவர்களாக்கிற்று. இந்தியாவிலே விதவைகளைத் தீயிலிட்டுக் கொளுத்துவதையும், சோமநாதத்திற் பலர் தற்கொலை புரிந்துகொள்வதையும், குழந்தைகளைப் பலியிடுவதையும் அறியாதார் யார்? சோமநாதத்தில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் தற்கொலை புரிகின்றார்கள். சமீபகாலம் வரையில் அங்குக் கோயில்களிற் பார்ப்பார் கடவுளுக்கென்று மிகவும் அழகான பெண்களைத் தேர்ந்தெடுத்தார்கள். இவர்கள் பார்ப்பாரின் காம இச்சைக்குப் பலியானார்கள். ஒவ்வொரு கோயிலி லும் இவ்வகைப் பெண்கள் கூட்டமாக இருக்கிறார்கள். இவர்கள் விலை மாதர்த் தொழிலால் ஈட்டும் பொருள் கோயிலின் உண்டியை நிரப்புகின்றது. இப்பெண்கள் மரியாதையிற் குறைந்தவர்களாகக் கருதப்படுவர். கடவுளுக்குச் செய்யப்படும் மரியாதையின் பகுதியை இவர்களும் பெறுகின்றனர். இவர்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். கலியாணமின்றி இவர்கள் வயிற்றில் பிறக்கும் குழந்தைகள் கடவுளுடைய குழந்தைகளாகக் கொள்ளப்படும்; ஆண்கள் வாத்தியம் வாசிக்கப் பயிற்றப்படுவர்; சிறுமியர் தாயின் தொழிலுக்குப் பயிற்றப்படுவர். சமய வளர்ச்சிக்காகப் பார்ப்பார் செய்யும் சிறப்பான செயல் இதுவாகும். பார்ப்பாரே வியபிசாரத்துக்குத் தலைவராவார்; கோயில்கள் வியபிசார விடுதிகளாகும்.

“கோயில்களில் பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட கடவுள் உருவங்கள் காணப்படுகின்றன. கோயிலில் தட்டு முட்டுகள் எல்லாம் பொன் தகடுகளால் செய்யப்பட்டவை. சுருங்கக் கூறுமிடத்தில் கோயில்களில் செல்வம் நிறைந்திருந்தது. அராபியர் ஆற்றோட்டம்போல இந்தியாவுள் நுழைந்தார்கள். அவர்கள் இச் செல்வங்களைக் கொள்ளை அடித்தார்கள்.”

“மகமத்கசினி, சோமாநாத ஆலயத்தில் உள்ள செல்வத்தைப்பற்றிக் கேள்விப்பட்டான். அதன் சபை பொன் ஓடுகளால் வேயப்பட்டிருந்தது. கசினி அக்கோயிலை அடைந்தபோது மிக வியப்படைந்தான். அவன் கோயிலில் குவிந்து கிடந்த பொன்னும் வெள்ளியுமாகிய செல்வங்களைக் கொள்ளை கொண்டான். அவன் கடவுள் சிலையை அடித்து உடைக்கச் சென்ற போது பார்ப்பார் பெரும் தொகைப்பணம் கொடுப்பதாகக் கூறி அதனை உடைக்காதிருக்கும்படி வேண்டினர். அவன் அவர்கள் வார்த்தையைச் செவிக்கொள்ளாது விக்கிரகத்தை அடித்து உடைத்தபோது அதன் வயிற்றில் விலை ஏறப்பெற்ற முத்தும், நவமணிகளும் கலீர் என்று வெளியே சிந்தின. சோமநாதத்தில் கொள்ளையிடப்பட்ட செல்வத்தின் மதிப்புக் கணக்கிட்டுக் கூற முடியாத அளவினதாகும்.

எல்லாச் சாதியினரிடையும் பார்ப்பார் அரசனைத் தம் ஆணைக் குட்படுத்தியிருந்தார்கள் எனக் காட்டியுள்ளோம். இந்தியாவிலோ அவர்கள் ஒருபடி அதிகம் சென்றிருந்தார்கள். அவர்கள் மனு நூல் என்னும் ஒரு புத்தகத்தை எழுதினார்கள். அதில் சொல்லப்படும் சட்டங்களைக் கடந்தவர் களிடம் முடிவு நரகம் எனக் கூறினார்கள். ஒரு சாதி இன்னொரு சாதியோடு கலத்தல் கூடாது; மகன் தந்தையின் தொழிலையே செய்தல்வேண்டும்; பார்ப்பான் அவனுக்கு வரி விதிக்கலாம்; அவனிடம் வேலை வாங்கலாம். பார்ப்பார், பிரமாவின் முகத்தில் பிறந்தவர்கள். பார்ப்பாருக்குத் தானங் கொடுப்பதால் மக்கள் பாவங்களைப் போக்கலாம். இறந்தவர்களை மறுமை யில் இன்பமான இடங்களில் வாழும்படிச் செய்யலாம் என மக்கள் நம்பி னார்கள். ஆகவே, மக்கள் தமதும், தமது முன்னோருடையவும் மறுமையை நினைத்துத்தாம் அரிதில் முயன்று பெற்ற பொருள்களைப் பார்ப்பாருக்கும், கோயில்களுக்கும் கொடுத்தனர்.

எகிப்திய நாட்டில் எவ்வாறு பார்ப்பார் உயர்ந்த வாழ்க்கை நடத்தி னார்களோ அதற்கும் மேலாக இந்தியப் பார்ப்பார் வாழ்க்கை நடத்தினர். மலையாள தேசத்தில் மற்றைய நாடுகளிலும் பார்க்கப் பார்ப்பனர் அதிகாரம் படைத்திருந்தனர். அரசன் தொலைவில் நின்று தனது நிறை அளவு பொன்னை நிறுத்துப் பார்ப்பாருக்குத் தானஞ் செய்தான். இது மாத்திரமன்று. ஆயிரக்கணக்கான பார்ப்பாருக்கு உணவும், கையுறையும் வழங்கினான். மணமான பெண்ணை முதன் முதல் பார்ப்பானே அனுபவிக்கவேண்டுமென் னும் வழக்கு உண்டாவதானால் பார்ப்பாருடைய அதிகாரம் எவ்வளவு உச்சநிலை அடைந்திருந்ததென்பதை நாமே உய்த்தறியலாம்.

வடநாட்டுப் பார்ப்பார்
தென்னாட்டுப் பார்ப்பார் கோயில்கள் வாயிலாக அதிகாரம் பெற்றனர். வடநாட்டுப் பார்ப்பார், பிராமணர் எனப்பட்டனர். இவர்கள் சில கிரியை முறைகளை எழுதிவைத்துக்கொண்டு அம்முறைப்படி யாகங்கள் செய்தால் பெரிய நன்மைகள் உண்டாகும்; மறுமையிலும் சுகமுண்டு எனக் கூறினர். யாகம் செய்வது அரசர் போன்ற செல்வருக்கன்றிப் பொதுமக்களுக்கு எளிதன்று. ஆகவே, அரசன் பிராமணரின் வார்த்தைகளை மெய்யெனநம்பிப் பெரும் பொருட் செலவில் பெரிய பெரிய யாகங்களைச் செய்தான். யாகங் களினால் அரசனின் கருவூலம் வறிதாயிற்று. செல்வங்களை எல்லாம் பார்ப்பார் தானமாகப் பெற்றனர். அவர்கள் செய்தயாகங்கள் அசுவமேதம், புருஷமேதம், சோமம், கோமேதம் போன்ற கொடிய யாகங்களாகும். இவ் வியாகங்களிற் கொல்லப்பட்ட விலங்குகள் மிடாக்களில் சமைக்கப்பட்டுப் பார்ப்பாரால் உண்ணப்பட்டன. இவைகளை உண்டதனால் அதிகத் தீமை உண்டாகவில்லை. அதிக இடக்கரான கிரியைகளைச் செய்யும்படி அரச பத்தினிகளைத் தூண்டினர். புத்திரகாமேஷ்டி யாகங்கள் என்பவை யாவை? அஸ்வமேதயாகம், புருடமேத யாகங்கள் மிக இடக்கரானவை. கொல்லப் பட்ட குதிரையோடும், மனிதனோடும் அரச பத்தினிகள் சேர்ந்தார்கள்; சேர உடன்பட்டார்கள்! இவ்வாறு செய்யும்படிப் பார்ப்பார் கட்டளையிட்டார்கள். அவ்வாறு செய்வதற்கு மந்திரங்களும், கிரியைகளும் எழுதி வைத்தார்கள் என்றால் மனிதனின் தோள்மீது ஏறிச் சவாரி செய்த இவர்களைப்போல வேறு எவரையும் காண்டல் அரிது.

(Indian Historical Review, Vol 16-1940-p.86.) “இப்பொழுது அரசனின் முதல் தேவி, பிரகஸ்பதி எனக் கருதப்படும் யாகத்தில் கொல்லப்பட்ட குதிரை யின் அண்மையிற் சென்று அதன் விதையைப் பெறுவதற்கு ஆவல் அடை கிறாள். பின்பு அவள் குதிரையின் பக்கத்தே படுக்கிறாள். மந்திரங்கள் சொல்லப்படும்போது அவள் குதிரையைச் சேருவதற்குப் பலவாறு முயல்கின் றாள். இடக்கான இந்நிகழ்ச்சி நடைபெறும்போது அத்வாரு என்னும் வேள்வி புரியும் தலைமைப் பார்ப்பான் குதிரையையும், அரசபத்தினியையும் போர்வை யால் மூடிவிடுகிறான். இடக்கரான அச்செயலைப் புரிவதற்கு அவள் மூன்று முறை மறுக்கிறாள். மூன்று முறை மற்றவர்கள் அவளுக்குச் சமாதானஞ் சொல்லி அவளை இணங்க வைக்கிறார்கள். எல்லா வகையான மோசமான, ஒழுக்கக்கேடான செயலும், பேச்சும் ஒருமித்து நிகழ்கின்றன. இவையெல் லாம் கருத்தரிக்கும் பொருட்டு ஆணும்,பெண்ணும் சேர்வது தொடர்பான கிரியைகளும், மந்திரங்களுமாகும். பார்ப்பார், அரசி, தோழிகளுக்கிடையில் இடக்கரான சல்லாபம் நடைபெறுகிறது. இச்சல்லாபத்தின் இறுதியில் அரசி யின் தோழிகளாலேயே அவள் இடக்கரான செயலுக்கு உடன்படுத்தப்படு கின்றாள்.

புருடமேத யாகத்திலும் அரசி கொல்லப்பட்ட ஆடவனுடன் படுக் கிறாள். இது அவள் அசுவமேத யாகத்தில் செய்துகொள்வது போன்ற செய லாகும். இருவரையும் போர்வையால் மூடியபின் அரசி இடக்கரான செயலைப் புரியும்படி விடப்படுகின்றாள். அசுவமேத யாகத்தில் நடந்தது போன்ற சல்லாபம் இப்பொழுது நடைபெறுகின்றது. இச்செயல் முடிந்ததும் ஹோதாவும் மற்றவர்களும் அவளைத் தூக்கி நிறுத்திவிடுகின்றார்கள்.”

இவ்வகையான கிரியைகளைச் சொல்லும் நூல்கள் மிகப் புனித முடையனவென ஒரு கூட்டத்தார் சொல்ல, அதனை உண்மையெனப் பொது மக்கள் நம்புவார்களானால் அவர்களின் அறியாமை எவ்வளவு உச்சநிலை யில் இருந்திருக்கின்றதென்பதை நாம் உய்த்தறியலாகும்.

சில குறிப்புகள்
கிறித்து காலத்தவரான ‘ஸ்ராபோ’ (Strado) என்னும் பூமி சரித்திர ஆசிரியர்
கூறியிருப்பது வருமாறு:-

கொரிந்துக்குச் செல்லும் எல்லா மனிதரும் பயன் அடைவதில்லை; பட்டினத்தின் ஒவ்வொரு ஒடுங்கிய வீதியிலும் காதல் வேட்கை நிறைந்த பெண் பூசாரிகள் நெருங்கியிருந்தார்கள். வீதிகளின் இரண்டு பக்கங்களிலும் வியபிசார விடுதிகள் இருந்தன. வீனஸ் கோயிலில் ஆயிரம் “கோயில் பெண்கள்” இருந்தார்கள். இவர்கள் கப்பற்காரன் முதல் ஞானிக்கும், வணிகருக்கும், எழுத்தாளருக்கும் தங்கள் போகத்தை அளிக்க, எப்பொழு தும் ஆயத்தமாய் இருந்தார்கள்.’ (The life and faith - Rom Landau p.215)
கொல்லத்தில் பாதி எருதும் பாதி மனிதனுமாகிய வடிவுடைய ஒரு தெய்வத்தையும் மக்கள் வணங்குகிறார்கள். அக்கடவுள் தனது விருப்பத்தை வாயினால் தெரிவிக்கிறது. சில சமயங்களில் அது நாற்பது கன்னிப் பெண்களின் இரத்தத்தைக் கேட்கின்றது. சில காணிக்கைகள் கொடுக்கச் சிலர் நேர்வதுபோல அங்குப் பெற்றோர் தமது சிறுவரையும், சிறுமியரையும் தெய்வத்துக்கு நேர்ந்துவிடுகிறார்கள். (Friar Oddoric 1321 A.D.). இவ்வாறு இந்தியாவை 14-ஆம் நூற்றாண்டில் (Footprint of the Past p.85 J.M. Wheeler) தரிசித்த பிரயர் ஓதோக் என்பவன் கூறியுள்ளான்.

சோமநாதத்தில் தேர்விழாவுக்கு மிகப்பலர் வந்து கூடுகிறார்கள். பலர் தமது கழுத்தை உருண்டுவரும் தேர்ச் சக்கரத்தின்கீழ் கொடுத்து மடிகின்றனர். எந்த ஆண்டிலாவது ஐந்தாறு பேருக்கும் குறைவானவர்கள் மடிவதில்லை.
யூதருடைய ஆலயங்களில் பரிசுத்த வியபிசாரங்கள் நடந்தன. எரதோதசு, ஸ்ராபோ, லூசியன் என்போர் இவ்வழக்கம் பாபிலோனிலும் சிரியாவிலும் இருந்தமையைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

பார்ப்பான் என்போன் வியப்புக்களை உண்டாக்கக்கூடிய மந்திர வித்தைக்காரன். தெய்வத்துக்கு மனிதப் பலிவேண்டுமென அவன் கூறினால் அவ்வாறே செய்யப்பட்டது. (Outline of knowledge VolI p. 181 - Fredrick H. Martain)

மூன்று கண்டங்களிலும் ஞாயிற்றுக்கடவுளின் பலி பீடங்களில் இரத்த வெள்ளம் ஆறாக ஓடிற்று. பார்ப்பானாகிய தெய்வம் கட்டளையிட்டபோது ஆடவர், மகளிர், குழந்தைகளின் கழுத்துகள் பலியிடும் கத்தியின்கீழ்ச் சென்றன. இருண்ட உள்ளமுடைய பார்ப்பான் தான் சரியான கருமத்தைச் செய்ததாக நினைத்தான்! (lbid-p. 182)

கிழக்குத் தேசங்களில் பரத்தைத் தொழில் உடையவள் கோயில் பரத்தையாயிருந்தாலன்றி மதிப்பு அடையவில்லை. அவள் தனது தொழிலைச் சமய சம்பந்தமாகப் பயன்படுத்தினாள். எகிப்து, அசீரியா, பாபி லோனியா, பாரசீகம் முதலிய நாடுகளில் கோயில்கள் ஒழுக்கக் கேடுகளின் நிலையங்களாகவிருந்தன. ஆலயங்களில் ஆண் - பெண் சேர்க்கை புரிவது சமயக் கடமையாகக் கருதப்பட்டது. கிரீசில் இது சமய சம்பந்தத்திலும் பார்க்கப் பொருளீட்டும் தொழிலாகக் கருதப்பட்டது. கொரிந்தில் அபிரடோயிற் கோயிலில் கப்பற்காரனின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மிகுதியான விலைமாதர் இருந்தனர்.

சின்ன ஆசியாவிலுள்ள கிரேக்க நகரங்களில் கோயில் விலை மாதர் இருந்தனர். கிரீசில் அவர்கள் கீழாக மதிக்கப்பட்டனர். கிரேக்கில் விலை மாதர் அமைப்பு அரசாங்கத்துக்கு மாத்திரம் தனி உரிமையுடையதாயிருந்தது. அவ்வமைப்பினால் வரும் பொருள் தீட்டுப்பணம் எனப்பட்டது. ‘மிலிறஸ்’ என்னும் பட்டினம் விலை மாதருக்குப் பேர் போனது. (lbid. p. 27)

பார்ப்பாரின் கொடுமையை ஒழிப்பதற்கே புத்த மதம் எழுந்தது. பார்ப்பாராகிய பிராமணர் பிற்காலத்தில் மிக அகங்காரங் கொண்டிருந்தார்கள். கல்வி, இம்மனித தெய்வங்களிடமிருந்தது; மற்ற மூன்று சாதியினரும் மூடத்தனத்தில் இருப்பதே இவர்கள் வலிமையாகவிருந்தது. (Literary achievement of Indian women- Mrs. Hansa Metha - B.A.J.P.)

“பிராமணச் சட்டங்கள் பிராமண, சத்திரிய சாதிகளை அமைப்பதில் வெற்றியடைந்தன. வேத பாடங்களைச் செய்தவர்களுடைய சந்ததியினரும் அவர்களின் உறவினரும் பிராமணர் என்னும் சாதியாராயினர். பிராமணன் பிராம்மாவின் மிகவும் உயர்ந்த பகுதியினின்று பிறந்தமையாலும், அவனிடத் தில் வேதம் இருப்பதாலும், அவன் உலகப் படைப்புக்கள் எல்லாவற்றுக்கும் தலைவனாக இருக்கின்றான் என மனு கூறுகின்றார்.

இப்பொழுது வட இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட சமயத் தலைவன் இல்லை. சாத்திரங்களில் சொல்லப்பட்ட முக்கியமான விதிகளை ஒருவன் மீறினால் அவனுக்கு என்ன தண்டனை செய்யலாம் என்று பண்டிதர்களுடன் ஆலோசனை செய்யப்படுகின்றது. அவர்கள் தண்டனை விதிப்பதற்கு அவ்வளவு அதிகாரமுடையவர்களல்லர். அவர்கள் விரும்பினால் குற்றஞ் செய்தவன் கொடுக்கும் காரணங்களை ஏற்காமலும், அவன் வீட்டில் நடக்கும் கிரியைகளுக்குப் போகாமலும் விடலாம்.

தென்னிந்திய வைணவரல்லாத பிராமணர் சங்கராச்சாரியார் மடத்தின் அதிகாரத்துக்குட்பட்டவர்கள். இதன் தலைமையாயுள்ள சிருங்ககிரிமடம் மைசூரிலுள்ள துங்கபத்திராவில் உள்ளது. இம்மடத்தலைவர், ஐரோப்பியாவி லுள்ள கத்தோலிக்க மதத்தினருக்குப் போப்பாண்டவர் எவ்வாறு அதிகாரத் தோடு இருக்கின்றாரோ, அவ்வாறு இருக்கின்றார்.

பிராமணனல்லாத இன்னொருவனுக்குப் பிராமணன் குனிந்து வணக்கஞ் செய்யமாட்டான். மற்ற வகுப்பிலுள்ள இன்னொருவன் வணக்கஞ் செய்தால் பிராமணன் “வெற்றி உனக்காகுக” என்று மாத்திரம் சொல்லுவான். வணக்கஞ் செய்தவன் அரசன் அல்லது பிரபுவானால் அவன் தனது வலது கையை நேராக நீட்டித் தனது மகிழ்ச்சியைத் தெரிவிப்பான். மற்ற வகுப்பினர் தமது மரியாதையைப் பிராமணருக்குப் பலவாறு தெரிவிக்கின்றனர். சிலர் அவன் பாதத்தில் விழுந்து வணங்குகின்றனர். பின்பு அவர்கள் அவன் பாதங் களைக் கைகளால் தொட்டு விரல்களைத் தமது வாயிலும், நெற்றியிலும் ஒற்றிக் கொள்கின்றனர். சூத்திர வகுப்பினர் பிராமணனுடைய நிழலைத் தாண்டவும் மாட்டார்கள். இவர்கள் பிராமணனின் பெருவிரல் வைத்துக் கழுவப்பட்ட நீரைக் குடியாமல் காலையில் உண்ணமாட்டார்கள். பிராமண னல்லாதார் வீட்டில் வைத்துப் பிராமணக் குருமாரால் வழிபடும் கடவுளரை அவர்கள் கும்பிடமாட்டார்கள்.

சில காலங்களில் அவ்வாச்சாரியினரும் பிராமணர் எல்லோருக்கும் விருந்தும் தானங்களும் கொடுக்கவேண்டுமென்று அவர்களின் சாத்திரங்கள் மாத்திரம் பிராமணன் உணவையும், தானத்தையும் தடையில்லாமல் ஏற்கலாம். அவன் சூத்திரனிடத்தில் தானம் வாங்கினாலும், அவன் சமைத்த உணவை உண்டாலும் அவன் பிராமணத் தன்மையை இழந்துவிடுகின்றான். சூத்திரனுடைய வீட்டில் பிராமணன் சமைக்கப்படாத உணவை அல்லது பிராமணனால் சமைக்கப்பட்ட உணவை உண்ணலாம். இக்காரணங்களால் பிராமணனிடத்தில் தானம் பெறுகின்றவன் தானம் கொடுக்கின்றவனுக்குப் பெரிய கடமைப்பாடு செய்கின்றவனாகக் கருதப்படுகின்றான்.

பிராமணன் சூத்திரன் ஒருவனைத் தான் உண்டு மிஞ்சிய எச்சிலாகிய பிரசாதத்தை உண்ணும்படி அழைப்பான். சிலர் இலையிலுள்ளதைச் சிறிது கிள்ளி எடுத்து உண்பர். சிலர் இலையில் உள்ள உண்ட மிச்சத்தை உண்பர்.

சூத்திரன் பிராமணனுக்குத் திருமுகம் எழுதவேண்டுமானால் தான் அவனுடைய பாத தாமரைகளுக்குக் கோடி வணக்கம் செய்வதாகத் தொடங்கி எழுதவேண்டும். பிராமணன் மற்றவர்களுக்கு எழுதவேண்டு மாயின் அவனுக்கு இனிமேல் பல நன்மைகள் கிடைக்கத் தான் ஆசீர்வதிப்ப தாகத் தொடங்கி எழுதுவான். அவர்கள் தமது பெண்களுடைய பெயரின் இறுதியில் தேவி என்பதைச் சேர்த்து வழங்குவர்; சூத்திரப் பெண்களுக்கு அவர்கள் தாசி என்னும் பெயரை இறுதியில் இட்டு வழங்குவர்.

பிராமண பண்டிதர்களுக்கு ஒரு காலத்தில் மதிப்பிருந்தது. இந்து அரசர் காலத்தில் ஆட்சி அவர்கள் கையிலேயே இருந்ததென மக்கள் நம்பி னார்கள். ஆங்கிலர் ஆட்சியில் அவர் பெயரே காணப்படவில்லை. கல்வி யில்லாத மக்களிடையே அவர்களின் செல்வாக்கு இன்றும் இருந்து வரு கின்றது. அவர்களுடைய தொழிலின் மதிப்புப் போய்விட்டது. மேலான ஆங்கிலக் கல்வியின் வளர்ச்சியினால் அக்கூட்டத்தினரின் செல்வாக்கும் குறைந்து வருகிறது.

இந்துக்களின் கருத்துப்படிப் பூசாரித் தொழில் தாழ்வுடையது. வாழ்க்கைக்கு வேறு வழியில்லாதவன் இத்தொழிலைப் புரியலாம். பூசாரித் தொழில் புரிபவர்கள் பெரும்பாலும் அறியாமையுடையவர்கள். அவர்கள் தமது கடமைக்கு வேண்டிய சில கிரியைகளை மாத்திரம் அறிந்தவர்களாவர்.

குரு அல்லது ஆச்சாரியர் என்னும் பெயர்கள் தொடக்கத்தில் வேதங் களைப் படிப்பிக்கின்றவனைக் குறிக்க வழங்கின. வேதங்களைப் படியாதவர் களையும் இப்பெயர்கள் குறிக்கும்படிப் பிராமணர் ஒரு சூழ்ச்சி செய்தனர். வேதங்களைப் பெண்களும் சூத்திரரும் படித்தல் ஆகாது. இருந்த வரையில் படிக்கக் கூடிய சில சொற்களை அவர்கள் மந்திரங்கள் எனக் கூறினர். மந்திரங் களைச் சூத்திரரும் பெண்களும் பயிலலாம். சிறிது கடவுள் பத்தியும், கெட்டித் தனமுமுள்ள பிராமணனைச் சுற்றிப் பல மாணாக்கர் சேர்ந்தார்கள். அவர்கள் பிராமணனைத் தெய்வமெனக் கொண்டு அவனை வணங்கி அவனுக்குப் பொருள் கொடுத்ததல்லாமல் அவனுடைய சந்ததியினருக்கும் ஆண்டு தோறும் வரி கொடுத்து வந்தனர். குரு மாணாக்கரைத் தமது சொத்துக்களாகக் கருதினார். குருவின் பிள்ளைகள் இச்சொத்துக்களைத் தமக்கிடையே பங்கு போட்டுக் கொண்டார்கள்.

இம்மந்திரங்கள் ஊங், றீங், கிலீங் போல்வன.குரு இம்மந்திரங்களை மாணாக்கரின் காதில் உபதேசித்து இவைகளால் அதிகம் நன்மை உண்டாகும் எனக் கூறினார். அவைகளின் தன்மைகளை அவர் யாருக்கும் சொல்லவில்லை. ஆகவே, இச்செயல் வெளியே கண்டிக்கத்தக்க நிலைக்கு வரவில்லை. குரு இவைமிகவும் இரகசியமாக இருக்கவேண்டுமென வற்புறுத்தினார்.

வைணவர் இம்மந்திரங்களுக்குப் பதில் அரி என்னும் பேரைச் சொன்னால் போதுமானதென்றனர். மந்திரங்களுக்குப் பதில் கடவுளின் பெயரைக் குறிப்பிட்ட தடவை சொன்னால் அவனுக்குக் குரு தேவையில்லை எனவும் நம்பினர்!

நம்பூதிரிப் பிராமணனை நாயர் தொடுதல் கூடாது. தீயன், நம்பூதிரிக்கு முப்பத்தாறு அடி தூரத்தில் நிற்றல்வேண்டும்; மாலன் நாற்பது அடி தூரத்தி லும், புலையன் 96 அடி தூரத்திலும் நிற்கவேண்டும். பிராமணனைப் புலை யன் தீண்டினால் அவன் உடனே முழுகித் தனது உடையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

குரு அல்லது பூசாரித் தொழிலினால் அதிக மரியாதை, அதிகாரம், செல்வம் முதலியன உண்டாகும் என்று கருதப்படுகின்றது. குருமார் தொடக் கத்தில் தம்மை மக்கள் மரியாதை செய்ய வேண்டுமென விரும்புகின்றார்கள். பின்பு அவர்கள் பொருளில் வாஞ்சையுடையர்களாகின்றனர். அவர்களின் அதிகாரம் வேரூன்றியதும் அரசனுக்கும் இல்லாத உல்லாச வாழ்க்கையை விரும்புகின்றனர். அரசர் தமது குடிகளின் வருவாயில் ஒரு பகுதியைப் பெற்று நிறைவடைவர். குருமாரோ தம்மிடம் அகப்பட்டவர்களை அழிப் பதால் பொருள் கிடைக்குமெனக் கண்டால் அதனைச் செய்துவிடுவார்கள். நியாயவாதிகளுக்காவது (வக்கீல்) கூலியின் அளவு உண்டு. குருமார் கேட்பதற்கு அளவு இல்லை. தம்மை அண்டியவர்களைச் செல்வராக்கும் வல்லமை தம்மிடம் உண்டென அவர்கள் கூறுவார்கள். ஆனால், அவர்கள் மற்றவரை வறுமை அடையச் செய்வதே முடிவு. குரு, தனது கிரியைகளும், மந்திரங்களும் பயனளிக்கவில்லையானால், குற்றத்தைத் தீய கிரகத்தின் மீதும், கிரியை புரிவித்தவனின் நம்பிக்கைக் குறையின்மீதும் சுமத்துவர். குருட்டுத்தனமாகப் பெரிய கூட்டம் தம்மைப் பின் தொடர்கின்றது என்று கண்டதும் அவர்கள் தமது எல்லாத் தந்திரங்களையும் பயன்படுத்துவர். ஒருவன் காய்ச்சல் நோய் கொண்டானாயின், அவன் குயினாமருந்தில் வைக்கும் நம்பிக்கையிலும் பார்க்க, குருமாரின் மந்திரங்களில் நம்பிக்கை மிகுதியாக வைக்கிறான். இடியின் கோபம் தாக்காதபடி ஒவ்வொரு இந்தியனும் வீட்டுக் கதவின் முன்புறத்தில் சமக்கிருத வசனங்கள் எழுதிய அட்டையை ஒட்டியிருந்த காலம் ஒன்று இருந்தது. மின்சாரம் சம்பந்தமான இக்காலக் கல்வி, இடியைத் தடுக்கும் ஐந்து கடவுளரை நம்புவதிலும் பார்க்க மின்கவரும் கம்பியை நம்பும்படிச் செய்துள்ளது. மரக் கலங்களுக்கு உடைவு அல்லது தீயினால் அபாயம் உண்டாகாமல் இருக்கும் பொருட்டு இன்றும் இந்திய வணிகர் பலர் பிரமா, கங்கை, வல்லபாச்சாரி முதலிய தெய்வங் களுக்குப் பெரும் பொருட்செலவு செய்து பூசை இடுகின்றனர். இன்று நெருப்பினால் அபாயமுண்டாகாமல் இருப்பதற்குச் செங்கற்களால் வீடுகள் கட்டப்படுகின்றன; கப்பல் உடைவுகளால் நேரும் நட்டத்துக்கு மக்கள் பிரமபூசை, கங்கா பூசைகளிலும் பார்க்க “இன்சூரன்ஸ் கம்பெனிகளை” நம்பி வருகின்றனர். காலம் தோறும் குருமாரின் வேலைகள் சுருங்கி வருகின்றன. குருமாரின் ஆட்சி, சக்கரவர்த்திகளின் ஆட்சிபோல அமைக்கப்பட்டிருந்த தென்பதை நாம் சரித்திர முகமாக அறிகின்றோம். அரசனுடைய ஆணைக்குக் கீழ் உள்ள மக்கள் அவனுடைய ஆசீர்வாதத்தை விரும்பினார்கள். அவ் வாறே சமய ஆட்சிக்குட்பட்ட மக்கள் சமய குருவின் ஆசீர்வாதத்தை விரும் பினார்கள்.

வேட்டையாடியும் மீன் பிடித்தும் வாழுகின்ற நாகரிகமற்ற மனிதனை இரக்கமில்லாத குணங்களினால்தான் குரு அடைய முடியும். அநாகரிக மனித னுக்குச் செல்வத்தைச் சேர்த்து வைப்பதில் விருப்பு இல்லை; அவனுக்கு மறுமையிலுண்டாகும் சுகதுக்கங்களைக் கூறுவதினாலும் பயனில்லை. நோய்களும், மரணங்களும் இரத்த விருப்புள்ள மூர்க்கமான தெய்வங்களால் உண்டாகின்றனவென்றும் ஆடு, பன்றி, மாடு, எருமை முதலியவைகளைப் பலியிடுவதனால் அவைகளின் கோபம் தணியும் என்றும் கூறுவதே குருமார் போதிப்பதற்கு ஏற்ற பாடமாகும். இதனால் பூத வணக்கங்களும் மிருக பலிகளும் தோன்றின.

பின்பு மக்கள் பயிரிடுவோராக மாறினர். இப்பொழுது உடம்பு உழன்று உழைப்பதில் சோம்பல் கொண்டோரும், பிறர் தொழிலில் தங்கி வாழ்பவர் களுமாகிய இக்கூட்டத்தினர், மழை ஒரு தெய்வத்தினால் உண்டாகின்றது எனக் கூறினர்.

இந்நம்பிக்கை வலுவடைந்தவுடன் குருமார் இவ்வழிபாட்டுக்கு ஒரு அட்டவணை கோலினார்கள். இது நெருப்பை வளர்த்து அதில் வெண்ணெயை ஊற்றிச் சாம்பிராணி எரித்தல் ஆகும். குருமாரினால் பயிரிடும் மக்கள் அடைந்த பெரிய பலன் இதுவாகும். குருமாரின் சடங்குகளால் வீணே பண்டங்கள் செலவாயின. இது தடுக்க முடியாமல் எப்பொழுதும் வளர்ந்தது.

முற்காலக் குரு, பயிரிடுவோருக்கு மழையையும், நோயுள்ளோர்க்குத் தேக நலத்தையும், பிள்ளையில்லாத பெண்களுக்குப் பிள்ளையையும் இவை போன்ற பலவற்றையும் கொடுப்பதாகக் கூறவேண்டியிருந்தது. அவர்களுக்கு மோட்சம், வீடு என்பவைகளைப்பற்றித் தெரியாது. இயற்கையில் மழை பெய்ய வேண்டிய காலத்தில் மழை பெய்யும்; நோயானது மருந்தினால் அல்லது இயற்கையினால் குணமடையும்; மலடியும் இயற்கை சம்பந்தமாகப் பிள்ளையைப் பெறுவாள். இவை நிகழ்ந்தால் குரு இவைகள் தன்னால் நேர்ந்தனவென்று கூறக் கற்றுக்கொண்டான். இவை நிகழவில்லையாயின் அவன் கிரகங்கள்மீதும் அவர்களின் நம்பிக்கை இன்மை மீதும் பழியைப் போட்டான்.

மக்களை எவ்வளவுக்கு ஏமாற்றலாம் எனக் குரு அறிகிறானோ அவ்வளவுக்கு அவன் அதிக தெய்வங்களை உண்டாக்குகிறான். மக்களின் நம்பிக்கையைப் பெறும் பொருட்டு மிகவும் சிக்கலானவும், கவர்ச்சி அளிப்பனவுமாகிய கிரியைகளை வகுக்கின்றான். இக்கிரியைகளால் தெய்வங்கள், இறந்தவரின் ஆவிகள், ஆறுகள், வெந்நீர் ஊற்றுக்கள், மரங்கள், பறவைகள், விலங்குகள், பாம்புகள் எல்லாம் இக்கிரியைகளுக்கு அடங்கி நடக்கும். இப்பொழுது பக்தன் நெய், இறைச்சி, ஆடு, மது முதலியவைகள் மாத்திரல்ல குருவின் வேலைகளுக்குத் தக்க கூலியும் கொடுக்கும்படிக் கேட்கப்பட்டான்.

சில நாடுகளில் குருமார் தமது சக்கராதிபத்தியத்தை நீண்ட காலம் நடத்தி வந்தார்கள்; வருகின்றார்கள். அவர்களை எப்பொழுதும் சமாதானமாக ஆட்சி நடத்த விடுவது முடியாது. அதிகாரம் அளவு கடந்துவிட்டால் அதன் தீய பயன்பாட்டைத் தடுத்தல் அரிது என நாம் பழக்கத்தில் காண்கிறோம். இது குருமார் சம்பந்தப்பட்ட அளவில் ஒரு புற நடை ஆகமாட்டாது. தீ வணக்கத்திலும் பார்க்க உருவ வணக்கம் குருமாருக்கு மிக வாய்ப்பு அளிப்பது. உருவ வணக்கத்தினால் கோயில்களுக்கு அரசாங்கத்துக்கு இருப் பதிலும் பார்க்க அதிகப்பட்ட சொத்துச் சேரும்; கோயில்களின் ஆதரவில் மடங்களும் தோன்றும். பொதுமக்கள் கொடுக்கும் சிறு தருமங்களையும் கோயில்கள் இழுத்துக் கொள்ளும்.

உலக மக்களைப் போலவே குருமார் மனித சமூகத்தினருக்கு நன்மை செய்தலுக்குப் பதில் தம்மைச் செழுமைப்படுத்த ஆவல் கொண்டவர்களா யிருப்பர். மக்களின் ஒழுக்கத்தை வளர்ப்பதற்கு அவர்கள் முயலுவதில்லை. சில சமயங்களில் அவர்களே ஒழுக்கக் கேடுகளை வளர்ப்பர். இது சில சமயங் களில் அவர்களின் காம இச்சையைத் தணிக்கும் வகையில் இருக்கலாம். அல்லது தம்மைப் பின்பற்றுவோரைத் திரட்டும் வகையில் ஆகலாம். அவர்கள் மறுமையில் நன்மையளிப்பதாகக் கூறுவர். மக்களின் இருண்ட துன்ப நிலையில் அவர்கள் ஒரு நம்பிக்கைஒளி தானும் அளிப்பதில்லை. சுருங்கக் கூறுமிடத்து அவர்கள் கொடுமையிலேயே மகிழ்ச்சி உறுகின்றனர்; நமது துன்பத்தைப் போக்குவதற்குப் பதில் துன்பங்களை அதிகப்படுத்து கின்றனர். இவர்களுடைய சமயத்துக்கும், கடவுளை அறிவதற்கும் யாதும் தொடர்புகிடையாது. நாகரிகமடைந்த உலகுக்குத் தகுதியான ஒழுக்க முறை களில் உயர்ந்த சமயம் உலகில் ஒன்றாவது இல்லையென்றே கூறலாம். மற்றவர்களைச் சமூகத்தால் தள்ளும்படிக் குருமாரின் நீதியில் சொல்லும் குற்றச்சாட்டுக்கள் அத்தனையும் அவர்களிடத்திலேயே காணப்படுகின்றன. ஒருவன் சமூகத்திலிருந்து விலக்கப்பட்டால், மரியாதையின்றியும், துக்கங் கொண்டாடப்படாமலும், இறந்தவிடம் தெரியாமலும் மறைந்து விடவேண்டும். உலக சரித்திர முழுமையிலும் இரத்தவெறி கொண்டு நீதிகளை அழிவு செய்த ஒருவனைக் குருமார் சமூகத்தினின்றும் விலக்கியதாகத் தெரியவில்லை. குருத்தொழிலைத் தாக்கக்கூடிய செயல்கள் உண்டானபோது மாத்திரம் குருமார் விழிப்படைந்து இவ்வாறு செய்துள்ளார்கள்.

பிற்காலத்தில் இந்திய சமய போதகர்கள் பிச்சை எடுத்து மக்கள் தமது ஒழுக்கத்தைத் தாழ்த்திக் கொள்ள அனுமதி அளித்தார்கள். இதனால், திட காந்திரமுள்ளவர்கள் தமது வாழ்க்கைக் கடமைகளை உதறிவிட்டுப் பொதுமக்களின் தருமத்தில் வாழ்கின்றனர். இவர்கள் திருடர், கொலையாளி களைப் போன்று அளவிடக் கூடிய கூட்டத்தவர்களல்லர். இத்தொழில் தலைமுறை தலைமுறையாக அதிகப்பட்டு வருகின்றது.

பாக்கர் குஞ்சி என்னும் நாட்டைப் பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஆண்ட சிற்றரசனின் வீட்டுக் கூரையில் பருந்து ஒன்று விழுந்து இறந்தது. அதனால் நேர்ந்த தீமையைப் போக்குவதற்கும் கன்னோஜியிலிருந்து வைதீகப் பிராமணர் ஒருவர் அழைக்கப்பட்டார். பெருந்தொகைப் பொருட் செலவில் கிரியை செய்யப்பட்டது. வைதீகர் தமது கூலியாக ஒரு ஜமீனைப் பெற்றார். அது இன்றும் அவர்களின் சந்ததியாரிடம் இருந்து வருகிறது.